POEMS

அமைதியின் நாட்கள்


அநாயாசமாய் குந்தி

தேசத்தில் எஞ்சிக்கிடக்குமோர்

அழகையேனும் ரசிக்க முடியவில்லை.

இன்னும்

பசுமையான வெளியொன்றில்

காற்றினது தாலாட்டோடு

சிறுதூக்கமொன்றேனும்

நிகழ்த்துவது எத்துணை

கடினமாயிற்று?

மீளவும் பனிகளில் கொடுகி

குளங்களில் முகிழ்த்தெழும்

ஈர நாட்களுக்கான

ஏமதின் கனவுகள்-ஏககணத்தில்

ஏப்படித் தோற்றன?

அமைதியின் காலத்திலும்

அழுகை இல்லாமல் வாழ்வதற்கா

இந்தமனம் இவ்வளவு

அநாயசப்படுகிறது.

துப்பாக்கிகள் மௌனமாய்த்தான்

கிடக்கின்றன.

ஆயினுமென்ன.

ஒவ்வொரு பொழுதும்

ஒவ்வொரு விதமாய்

துயர்களைக் காவிக்கொண்டே

விடிகிறது.

-மீள்பார்வை2003

பாடகன்

ஒவ்வொரு

மிகக்குளிரொடுங்கும்

பனிக்காலைப் பொழுதில் ஒரு மெல்லிய

குயிலின் ஓசையாய்

உன் பாடலைக் கேட்கிறேன்.

சூர்யோதயத்தோடே ஒலிக்கத்தொடங்கும்

உன் பாடலில் காற்றின் கூதலையும்

பனியின் வெண்மையையும் உணர்கிறேன்.

உன் பாடல் அவசியமானது

இன்றைய நாட்களின் எல்லாப்பாடல்களையும்

போலவே அதுவும் இரசிக்கப்பட அல்லது

கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

மிக அதிகாலைக் குளிரொடுங்கும்

இந்தப்பனிப்பொழுதில்

சிரமங்களோடு ஒலிக்கும் உன் பாடலின்

பரிணாமத்தையும் அதன் தேவையையும்

நான் உணர்கிறேன்.

துப்பாக்கிகளை விடவும் கூரிய வாட்களை விடவும்

உன் வாய்ப்பாடல் எவ்வளவு வலிமையானது

தெரியுமா?

நீ மௌனமாய் இருப்பதை விடவும்

இது எவ்வளவு உசிதமானது.

எல்லோரும் எல்லாவற்றையும் பேசிக்கொள்ளும்

இந்நாட்களில் நீ பாடிக் கொண்டே இரு

உன்னைப்பற்றிய பேச்சுக்கும்

நான் நினைக்கிறேன் உன் மௌனத்தைவிடவும்

உன்பாடலே உசிதமானது.

-மீள்பார்வை-2002

குரலற்றவர்கள்

இளவேனிற் காலத்து

இரவொன்றில்

கிளையுதிர்த்த மரத்தின்

பறவைகள் சிதறித்

தொலைந்தன.

கிளைகள் முறிதலின் பெரும்

சப்தத்தில்

துயில் களைந்து கூடுகளற்றுப்

போயினவா பறவைகள்.

இந்த இளவேனில்

நம் அடையாளத்தை அழித்தது.

நம் சுதந்திரத்தைப் பாடிய

கவிதையைச் சிதைத்தது.

எனினும்

சிலிர்த்த காற்றும் நிலவின்

மெல்லிய

ஒளிர்விலும் உறைந்த

பறவைகளின்

காலத்தைப் புசித்த

இளவேனிலின் தரிசனத்தைச்

சபித்தபடி

நம்பிக்கையற்று அலையும்

பறவைகளின் சிறகின் வலியை

கிளைகள் உணரத்தவறின.

இந்த நிஜத்தின் பிற்பாடு,

அலைகளற்றுப் போகுமா எமது

கடல்?

எமது ‘நாரே தக்பீர்கள’; காற்றின்

ஓசையில் நிறையுமா?

நம் காலம் கறுப்பாகிப் பின்

கனவாகிப்போமா?

ஏம் கூடுகளை இருளுட்டிய

இளவேனிலற்கால இரவே,

மண் பற்றிய வேர்களையும்

ஊடறுத்துப் பாயுமெம் சோகத்தின்

கவிதையைக் கேட்பாயா?

இனி எமது வானில்

நட்சத்திரங்கள் பூப்பதாக

மரக்கிளைகளில் பறவைகள்

உறைவதாக

எமது சூரியன் இன்னும்

உயிருடனிருப்பதாக

எமது குரல்கள் உலகின்

காதுகளில்

அதிர்ந்து கொண்டிருப்பதாகக்

காணுவோம்
.
தூக்கத்தின் கனவுகளில் மட்டும்…

-மீள்பார்வை-2003

கறுப்பாலான வெளி

மிகக் கறுப்பாலானதும்

மௌனம் கவிழ்ந்ததுமான

வெளியொன்றில் தனித்து விடப்பட்டிருக்கிறேன்

எனது வானில் நிலவில்லை, விண்மீன்களில்லை

ஒளி தரும் எதுவுமற்ற இந்த

இருள் வெளியில் நான் தனித்தலைந்து

திரிகிறேன்.

தூரத்தே தொலைதூரத்தே

என்னைப் போன்றதொரு தனித்த பறவையின்

பாடலைக் கேட்கிறேன்

அதன் வலியை உணர்கிறேன்

அதன் கனவுகளை காண்கிறேன்

அதன் அழைப்பைக் கேட்கிறேன்

வெளியெங்கும் அலைந்து திரியும்

பாடலின் பறவையே

என் சோகத்தை கேட்பாயா?

காற்றின் பேரோசையில் நீயுன்

சோகத்தை உரைப்பாய்

மரங்களில், மலைகளில், நீர்நிலைகளில்

மோதித் தெறிக்கும் உனது பாடல்

உனது சிறகுகள் உன் தனிமைக்குத் துணை

உனது பாடலும், உனது குரலும்

உனது கோரிக்கையாய் ஒலிக்கும்

கறுப்பாலான இந்த வெளியில்

தனித்து விடப்பட்ட எனது கனவுகளை

எடுத்துச் செல்ல என்னிடம் காற்றில்லை

எனது பாடல்களை ஒலிக்க

என்னிடம் குரலில்லை

சூழ்ந்திருக்கும் அச்சத்தையும்

மௌனத்தையும், இருளையும்

விட்டு விடுதலையாகி தூரப் பறக்க

சிறகுகளுமற்றிருக்கிறேன்

உண்மையில் நான் எனது

மரணத்தை விரும்பவில்லை

உண்மையில் நான் எனது துயரத்தை

விரும்பவில்லை

எனக்கு விதிக்கப்பட்ட காலத்தை

வாழவே விரும்புகிறேன்

எனது உலகத்தை ரசிக்கவே விரும்புகிறேன்

சூழ்ந்திருக்கும் அச்சத்தையும்

அடக்குமுறையையும் விட்டுவிடுதலையாகி

தூரப்பறக்கவே விரும்புகிறேன்.

-உயிர் நிழல்-2006

எய்தவனிருக்க அம்பை நோவுதல்

விடுதலை விட்டுச் சென்ற தடயங்களை

கடாசி எறிந்திருக்கிறது காலம்

எல்லார் முகங்களிலும் விடுதலையின் கீறல்

கை நீட்டி அழைத்தும்

ஒப்பாரி வைத்துப் பாடியும்

விடுதலை வராமலே போய் விட்டது-

விடுதலையின் கதை சோகமானது-

விடுதலையை இயற்றியவன் இறந்தான்

விடுதலையை பாடியவன் இறந்தான்

விடுதலையை இரசித்தவன் இறந்தான்

விடுதலையை வரைந்தவன் இறந்தான்

விடுதலை பற்றி அறியாதார் ஏனிறந்தனர்?

எய்தவனிருக்க அம்பை நோவானேன்!

09012010

சிலுவையிலறைதல்

எல்லோராலும் கைவிடப்பட்ட கடல் இது-

எனினும் நீ நீந்திக் கடந்தாய்

எவரும் பறக்க முடியாத வானம் இது

எனினும் நீ சிறகு விரித்தாய்

எவரும் கேட்க முடியாத பாடல் இது

எனினும் நீ இரசித்தாய்

எவரும் வெல்ல முடியாத போர் இது

என்னும் நீ ஜெயித்தாய்

ஆயினுமென்ன,

சுதந்திரத்தை வெல்வதில்

உண்மைகளை வெல்வதில்

நீ தோற்றுத்தான் போனாய்

காலச் சிலுவையில் உன்னை

அறையும் உண்மைகளிடம் நீ தோற்றுத்தான் போனாய்!

01032010

போரின் கவிதை 1

அந்த நாட்களின் கதையை

நான் ஞாபகிக்க விரும்பவில்லை

அலைகளுக்காடும் படகுபோல்

நினைவலைகளால் நான் அலைக்கழிக்கப்பட

விரும்பவில்லை.

என் நினைவுப் பெருங்கடலே

உனது மௌனத்தையே நான் விரும்புகின்றேன்.

விட்டில்கள் விழும் எனது விளக்கை

அணைத்து விட்டேன்.

விரும்பாத அத்தனை நினைவுகளையும்

மறந்துவிட்டேன்.

மரங்களின் கழுத்தை முறித்துச் சென்ற

நேற்றைய காற்றைப் போல்

என்னைத் திணறடித்த இன்னுமொன்றாய்

அலையும் ஞாபக அலையே

விரும்பாத நினைவுகளே விலகுங்கள்

நினைவுகளைத் துறந்தபின் நீளும்

இந்நாட்களில் நான் ஓவியங்கள்

வரைவேன் நான் அல்லலுற்ற, அழிவுற்ற

போரின் ஓவியத்தை வரைவேன்

விட்டில்கள் விழும் விளக்கை அணைத்தபின்

இருளாகிப்போன போரின் கவிதைகளை

வரைவேன்.

20071120

போரின் கவிதை 2

புரட்டிக் கொண்டே செல்கிறது காற்று

புத்தகத்தின் பக்கங்களை-

நீ பூஞ் சென்றுடன் வர மறந்த

நாட்களில்

நான் புல் முளைத்த பாழடைந்த கட்டடங்களின்

இடுக்கில்

தூசு படிந்த புத்தகங்களுடன்

காத்திருப்பேன்-

நீ வரும் வரை-

சிதிலமாய்ப் போன சுவர்களில்

போரின் சித்திரங்கள் பேசும்

புரட்டப்பட்ட பக்கங்கள் பேசும்

அநாமதேயப் பறவைகள் ஏதேதோ பாடிச் செல்லும்

நீ வரமாட்டாய்-

அப்போது-

மின்னலற்று இடி மட்டும் கேட்கும்

மேகங்களற்று மழை மட்டும் பெய்யும்

வெளிச்சத்தை தொலைத்து சூரியன் குருடாகிப் போகும்!

காற்று புரட்டிக் கொண்டே செல்கிறது

புத்தகத்தின் பக்கங்களை

சிதிலமாய்ப்போன சுவர்களில்

போரின் சித்திரங்கள் மட்டும் பேசும்

03112009

நாம் பேச எதுவுமற்றிருந்தோம்

உண்மைகள் மண்ணில் புதையுண்ட

கணத்தில்

நாம் பேச எதுவுமற்றிருந்தோம்-

கரகோசங்களைப் பெற்றபின்

எல்லோரும் கலைந்து விட்டனர்.

அவரவர் முகவரிக்கு அவரவர்

திரும்பிவிட்டனர்.

உண்மைகள் மண்ணில் புதையுண்ட

கணத்துக்குப் பின்-

நம் பேச்சுக்கள் வெறுமையுற்ற பின்-

மரங்கள் நிழல் தருவதாயில்லை

மழை சங்கீதம் தருவதாயில்லை

காற்று இதம் தருவதாயில்லை

வானவில் நிறங்களைத் தருவதாயில்லை

கடல் அலைகளைத் தருவதாயில்லை

உண்மைகள் புதையுண்ட கணத்துக்குப் பின்-

உதிர்ந்த நட்சத்திரங்களைப் போல்

எல்லோரும் கலைந்து விட்டனர்

அவரவர் முகவரிக்கு அவரவர் திரும்பிவிட்டனர்

நாம் பேச எதுவுமற்றிருந்தோம்-

07092009

அவைப்புலவனும் சாத்தானின் கவிதையும்


சாத்தானின் கவிதை: ஒன்று

எவனோ ஒருவன் என் தனிமையைத்

தின்கிறான்

எரிச்சலூட்டும் கவிதைகளை ஓதி ஓதி

கொடிய சாத்தானின் வசனங்களாகி

அவை என் தனிமையைத் தின்கின்றன

மின்னல் கோடுகளால் வானம் வரைந்த

ஓவியம் போல்

நிறங்களாளலான வானவில்லைப்போல்

அற்புதமான கவிதைகளை சாத்தான்கள் ஓதுவதில்லை.

அவைப்புலவன்

எறும்புக்கும் சேதாரம் செய்யா

சாந்த முகத்தோனே

நன்மைக்கிரங்கும் நாயனே

சுகபோகம் துறந்தோனே

சுக துக்கம் அறிந்தோனோ

நாட்டுநிலை பாராயோ

துயில் கலைந்து வாராயோ!

சாத்தானின் அடைக்கலம்: ஒன்று

சாத்தான்கள் வசனம் ஓதி ஓதி

பின் களைப்புற்றுக் கிடந்தனர்-

சாத்தான்கள் கவிதைகளால் முடிவது

எதுவுமில்லையெனக் கண்டனர்

ஆக, கவிதையின் கோட்டையைத் தகர்த்து

இன்னொரு அடைக்கலம் நாடினர்-

அவைப்புலவன்

சாந்த முகத்தோனே

குழந்தை மனங்கொண்டோனே

வாய்மூடி கண்திறந்து

கொடுமை பல கண்டோனே

இன்னும் வாய் திறந்து வாராயோ

ஏழை முகம் பாராயோ-

சாத்தானின் அடைக்கலம்: இரண்டு

அ)

கவிதையைத் துறந்த சாத்தான்கள்

துப்பாக்கியுள் அடைக்கலம்

புகுந்தனர்-

இறுகப் பற்றிய இரும்புக் குழல்களுக்கூடாய்

மனிதரை நோக்கினர்

எலும்புக் கூடுகளையும்

பிணந்தின்னிக் கழுகுகளையும்

அநேகமாய்க் கண்ணுற்றனர்.

ஆ)

துப்பாக்கி ஏந்திய சாத்தான்கள்

அமைதியை வெறுத்தனர்

போர் புரியவும் கவிதைகள் எழுதவும் விரும்பினர்

சாத்தான்களின் தலைவன் சத்தமிட்டான்

‘போர் வேண்டுமா? அமைதி வேண்டுமா?’

‘போர் வேண்டும் கவிதை எழுத போர் வேண்டும்!’

பெரிய சாத்தான் கனத்த குரலில்

போரைக் கூவியழைத்தான்

அவைப்புலவன்

கொல்லாமை உரைத்தோனே

கொல்லுமிவ் வையகம் கேளாயோ

அமைதி பூத்தவனே

அல்லலுறும் மக்கள் துயர் துடைப்பாயோ-

சாத்தானின் சுதந்திரம்: ஒன்று

கட்டளைக்குப் பணிந்து பணிந்து

கருமமாற்றும் சாத்தான்கள்

புதிது புதிதாய் சிந்தனைகள்

படைத்தனர்

போர்-

அமைதி-

சுதந்திரம்-

கவிதை-

சாத்தான்கள் புதிது புதிதாய் சிந்தனைகள் படைத்தருளினர்-

அவைப்புலவன்

தொண்டைத் தண்ணி வத்துதய்யா

வாயும் வயிருங் கொதிக்குதய்யா

குடிமனைகள் மூழ்குதய்யா

சாதி சனம் வாடுதய்யா

எழுந்தோடி வாருமய்யா

சாத்தானின் கவிதைகளைக் கொல்லுமய்யா

சாத்தானின் சுதந்திரம்: இரண்டு

சாத்தான் சுதந்திரத்தைப் படைத்தருளினான்-

இந்நூற்றாண்டின் மாபெரும்

சுதந்திரமாய்

இந்நூற்றாண்டின் மாபெரும்

அடிமைகள் கொண்டாடினர்-

விலங்கு-

பூட்டு-

துப்பாக்கி-

மரணம் கொண்டு கலவையானதோர்

மாபெரும் சுதந்திரத்தை

மாபெரும் அடிமைகள் கொண்டாடினர்

அவைப்புலவன்

“…………………..

……………………

……………………

……………………”

(கையில் விலங்குடன்

வாயில் பூட்டுடன்

துப்பாக்கி முனையில் மரணத்திடலில்

அவைப்புலவன் கிடந்தான்)

சாத்தானின் கவிதை:இரண்டு

இந்நூற்றாண்டின் மாபெரும் சுதந்திரத்தை

இந்நூற்றாண்டின் மாபெரும் அடிமைகள் கொண்டாடினர்!

01012010

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s