அரசியல் பௌத்தம் – சிங்களமயமாக்கலின் சமகால செல்நெறிகள் 

சிங்கள பௌத்த அடையாளம்: பன்மையிலிருந்து ஒருமைக்கு

பின்-காலனித்துவ இலங்கையில் பௌத்தம் மதமாகவன்றி அரசியலாகப்பார்க்கப்படும் நிலை தோன்றியுள்ளது. காலனித்துவ காலப்பகுதியில் நிலவிய அரசியற் சூழல் பௌத்தம் அரசியல் மயப்படுவதன் அவசியத்தை வேண்டி நின்றது என்ற உண்மை மறுப்பதற்கில்லை. எனினும் சமகால இலங்கையில் அரசியல் பௌத்தத்தின் இருப்பும்-தொடர்ச்சியும் சிறுபான்மை மக்களின் சுதந்திர இருப்பை அச்சுறுத்தும் ஒருவிடயமாகவே புரிந்து கொள்ளப்படவேண்டும். காலனித்துவ காலத்தில் பிரித்தானியர் மேற்கொண்ட பௌத்த அவமதிப்பு நடவடிக்கைகளுக்குத் தகுந்த பதிலடியாகவே சிங்கள-பௌத்த தேசியவாதம் மேற்கிளம்பியது என்ற வரலாற்றுப்பாடத்தை நாமறிவோம்.
பிரித்தானியர் சிங்கள மொழி, பண்பாடு மற்றும் மத நடவடிக்கைகள் போன்றவற்றைப் புறக்கணித்து ஒதுக்கியதாலேயே சில சிங்களத்தலைவர்கள் இலங்கையர்கள் அரசியல் விடுதலையை அடைய வேண்டுமானால் முதலில் மத விடுதலையை அடைய வேண்டும் என்ற பொதுப்புரிதலுக்கு வந்து சேர்ந்தனர். இந்த உணர்வெழுச்சியே சிங்கள பௌத்த தேசியவாதமாகப்பரிணமித்தது.இந்த உணர்வெழுச்சியை கொலினல் ஒல்கொட், அநகாரிக தர்மபால மற்றும் சில பௌத்த பிக்குகளும் ஒருசேர வளத்தெடுத்தனர்.மொழி,மதம்,பண்பாடு போன்றவற்றின் விடுதலையில் இது கவனம் செலுத்தியதனால் ‘பண்பாட்டுத் தேசியவாதமாகவும் நோக்கப்பட்டது. காலனித்துவ இலங்கையில் எழுந்த இப்பண்பாட்டுத் தேசியவாதத்தின் உண்மையான நோக்கம் காலனித்துவ சக்திகளிடமிருந்து பௌத்த மதத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி காலனித்துவ சக்திகளிடமும் ஏனைய சிறுபான்மையினரிடமும் நாட்டின் உரிமம் சிங்கள பௌத்தர்களுக்கேயுரியது என்ற ஒற்றைத்தேசிய அடையாளத்தைப் பரப்புவதாகவுமே இருந்தது. எனினும் கடந்தகால இலங்கையில் இலங்கைச்சமூகங்கள் அனைத்தும் பொதுவாக தமது மத,கலாசார அம்சங்களைப்பாதுகாப்பதிலேயே தமது கவனத்தைச் செலுத்தின. இதனால் இலங்கையின் காலனி;த்துவ அடையாளமென்பது பண்பாட்டுக்காரணிகளையே சார்ந்திருப்பதைக் காணலாம்.
இந்த பண்பாட்டுக் காரணிகளை அடிப்படையாக் கொண்டே இந்த சிங்கள பௌத்த அடையாளம் வெளிக் கொணரப்படடுள்ளது. பண்பாட்டுக் காரணிகள் எப்போதும் வலுவானவை. குறித்த சமூகத்தின் பண்பாட்டு அம்சங்களை மேன்மைப்படுத்தி பிற பண்பாடுகளிலிருந்து அதனை வேறுபடுத்தி குறித்த இச்சமூகத்துக்கென ஓர் அடையாளம் வழங்கப்படுகிறது. இந்த அடையாளம் பெரும்பாலும் அகவயமானது.

சிங்கள சமூக அடையாளம் குறித்து அகவய நோக்கிலான ஆய்வுகள் போதியளவில் சிங்கள அறிவுஜீவிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேராசிரியர் கே.என்.ஓ. தர்மதாஸ இத்தகைய அகவய ஆய்வுகளை மேற்கொண்டதில் தலையானவர். அகவயரீதியான ஆய்வுகளே சிங்கள சமூக அடையாளத்தைப் பேரினவாத அடையாளமாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தன என்பது வருத்தத்துடன் நினைவுகூறப்படவேண்டியதாகும். ஆனால் சிங்கள சமூக அடையாளம் குறித்த புறவய ஆய்வுகள் துரதிஸ்டவசமாக சிங்களப் புலமையாளர்களால் மிக சொற்பமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆர்.ஏ.எல்.எச்.குணவர்தன இத்தகையதொரு புறவய ஆய்வை மேற்கொண்டவர் என்றவகையில் பெருமைக்குரியவராகிறார்.
பன்மைச்சமூகங்கள் வாழும் நாட்டில் ஒரு இனம் மட்டும் தனது அடையாளத்தை அடிப்படையாகக்கொண்டு அந்நாட்டின் அடையாளத்தை நிரூபிக்க முயல்வது அதனது அதிகாரத்தைப்பாதுகாப்பதற்கான தந்திரோபாய நடவடிக்கiயாகவே கொள்ளப்படவேண்டும். ஜனநாயக சிந்தனைகளும், பொதுசன உளவியலும் வளர்ச்சியடையாத சமூகங்களில் இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இலங்கையில் நடந்ததும் இதுதான்.சிங்கள பௌத்தம் தனது அடையாளத்தை இந்த சட்டகத்துக்குள் சுருக்கிக்கொண்டது. இதனால் பன்மைத்துவ சமூகத்தை அடிப்படையாகக்கொண்ட இலங்கைத்தேசியத்தை உருவாக்குவதில் இலங்கை வெற்றிகரமான தோல்விகளைச்சந்தித்துள்ளது.

உண்மையில் அடையாள உருவாக்கம் (Identity formation) என்பது திட்டமிட்ட செயற்பாடல்ல் மாறாக அது வரலாற்று ஓட்டத்தில் இயல்பாக நடந்தேறும் தவிர்க்கமுடியாத அம்சமாகும். ஆனால் சிங்கள இனத்துவ அடையாளமென்பது இவ்வாறு இயல்பாக நிகழ்ந்தேறிய ஒரு வரலாற்று நிகழ்வல்ல் அது மிகத்திட்டமிட்ட வகையில் அரசியல் பௌத்தத்தினால் அந்த அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சமூகம் தனக்கென்று தனித்துவமான அடையாளத்தைக்கொண்டிருப்பதும் அதைக்கொண்டு அந்தச்சமூகம் அடையாளம் காணப்படுதையும் நாம் மறுக்கவில்லை. ஆனால் பன்மைத்துவ சமூகங்கள் வாழும் ஒரு நாட்டின் தேசிய அடையாளமாக குறித்த ஓரினம் தனது அடையாளத்தை மட்டுமே கட்டமைக்க முனைவதே அபத்தமாகும். அரசியல் பௌத்தவாதிகள் தங்களது குறுகிய அரசியல் நலன்களுக்காக இலங்கையின் தேசிய அடையாளத்தை சிங்கள பௌத்த அடையாளமாக கட்டமைக்கின்றனர்.

உண்மையில் சிங்கள பௌத்த அடையாளமானது இலங்கையின் தேசிய அடையாளமாக 19ம் நூற்றாண்டிலேயே பௌத்த அடிப்படைவாதக் குழுவினால் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அடையாளம் சிங்களவர்களைப் பிற இனக்குழுமங்களிலிருந்தும், பௌத்த சிங்களவர்களை பௌத்தரல்லாத சிங்களவர்களிலிருந்தும் அந்நியப்படுத்தியது. இந்த அடையாளப்படுத்தலை முன்னெடுத்த அரசியல் பௌத்தவாதிகள், சிங்கள பௌத்த அடையாளம் மிகத் தொன்மைக்காலத்தில் தோன்றியது என்றும் தொடர்ச்சியான நீண்ட வரலாற்றை உடையது என்றும் நிரூபிக்க முனைந்தனர். சிங்கள பௌத்த அடையாளமானது பல்வேறு சக்திகளை ஒடுக்கி அல்லது சமரசம் செய்துதான் சாதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பௌத்தம் இலங்கையின் தேசிய அடையாளமாக சிங்கள பௌத்தத்தை முன்னிறுத்தியபோது அது பல உள்ளார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. சாதி வேறுபாடுகள், வர்க்க முரண்பாடுகள், பிரதேச வாத கருத்தியல்கள் என்பவற்றால் பிளவுபட்டிருந்த சிங்கள சமூகத்தில் இவ் வேறுபாடுகள் கலையப்பட்டு அல்லது கலவையாக்கப்பட்டே இவ் அடையாள உருவாக்கம் நிகழ்ந்துள்ளது.

இலங்கையின் சிங்கள பௌத்த சமூகக் கட்டமைப்பானது சாதிக் குழுக்களின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. பொது வாழ்க்கையிலும், தனி வாழ்க்கையிலும் அவர்களுக்கிடையில் இச்சாதிமுறையின் செல்வாக்கு தெளிவாக உணரப்பட்டுள்ளது. குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கொவிகம, ரதல, கராவ,சலாகம போன்ற சாதிகள் பரவலாக அறியப்பட்டவையாகவும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாகவும் விளங்குகின்றன. சிங்கள சமூகத்தின் இச்சாதிக்கட்டமைப்பானது இந்து சமூகத்தில் போன்று வலுவானதாக இல்லாதபோதும் சமூக அரசியல் அடையாள உருவாக்கம் போன்ற முயற்சிகளில் தெளிவான செல்வாக்கை இவை கொண்டுள்ளன. சிங்கள சமூகத்தின் இச்சாதி அமைப்பானது மிக நீண்ட வரலாற்றிற்குரியது. இலங்கையின் தொடக்ககால மன்னராட்சிக் காலப்பகுதியிலும் இச்சாதி முறையிலான அரசியல் இலங்கையில் முன்னெடுக்கப்பபட்டிருக்கிறது. தமாரா குணசேகரா தரும் தகவல்களின்படி கண்டி அரசில் சாதி மிகத் தெளிவான செல்வாக்குடன் விளங்கியுள்ளது. சிங்களவர்கள் மத்தியில் காணப்பட்ட இச்சாதியானது அவர்களின் அரசியலில் மட்டுமன்றி மதம் மற்றும் ஏனைய சமூக நடவடிக்கைகளிலும் தெளிவான செல்வாக்கைச் செலுத்தின. பௌத்த மதபீடங்களில் குருமாராக சேர்ந்துகொள்ளுதல் சாதி அடிப்படையிலானது. ரதல பிரபுகளும் கொவிகம சாதியினருமே பிக்குகள் ஆக முடியுமாக இருந்ததை தமாரா குணசேகரா தனது ஆய்வொன்றில் எடுத்துக் காட்டியுள்ளார். மத நிறுவனங்களின் உயர் பதவிகள் கூட ரதல பிரிவினருக்கே வழங்கப்பட்டன.

பொதுவாக இச் சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்துள்ளன. கொவிகம,கராவ, சலாகம போன்ற சாதியினர் முறையே விவசாயம், மீன்பிடி, கறுவாப்பட்டை உரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். எனவே தாம் தாம் மேற்கொள்ளும் தொழில் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அரசியல் அதிகாரமும் தேவைப்பட்டது. எனவேதான் இச்சாதிகள் ஒவ்வொன்றும் காலனித்துவ இலங்கையின் அரசியல் சீர்திருத்தங்களில் சட்டசபைப் பிரதிநிதித்துவத்தை தனியாக கோரி நின்றன. அரசியலில் மட்டுமன்றி ஏனைய சமூகப் பொருளாதார நடவடிக்கைகளிலும் கூட தனித்தனியான நலன்களை முதன்மைப்படுத்தியும் பகைமையுணர்வுடனும் நடந்து கொண்டன.

சாதிரீதியான இந்த முரண்பாடுகளுக்கப்பால் வர்க்கரீதியான முரண்பாடுகளையும் சிங்கள பௌத்த சமூகம் வெளிப்படுத்தியது. முதலாளித்துவ உயர் குழாம், மத்தியதர வர்க்கம், கீழ் வர்க்கம் என வர்க்கரீதியாக பிளவுற்றுக்கிடந்த சிங்கள பௌத்த சமூகம் கரையோரச்சிங்களவர்கள் கண்டிச் சிங்களவர்கள் என்றவகையிலும் பிளவுபட்டிருந்தனர். இந்த ஒவ்வொரு குழுவும் தத்தமது நலன்களுக்காக மட்டுமே சிந்திக்கவும் செயற்படவும் செய்தன. இத்தகைய வெளிப்படையான முரண்பாடுகளை தனது முக்கிய பண்பாகக் கொண்டிருந்த சிங்கள பௌத்த சமூகமானது சுதந்திரத்துக்குப்பின்னர் இந்த உள் முரண்பாடுகள் களையப்பட்டு இப்பன்மைத்துவ சமூக அடையாளங்கள் நீக்கப்பட்டு சிங்கள பௌத்தம் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அரைத்துக் கரைக்கப்பட்டது.

சிங்கள சமூகத்தின் மத்தியில் இந்த அடையாளத்தைப் பெறுமானமுள்ளதாகவும் அங்கீகரிக்கத்தக்கதாகவும் மாற்றுவதற்காக வேண்டி இலங்கையின் தேசிய அரசியலில் பௌத்தம் முதன்மைப்படுத்தப்பட்டது. எனவே சிறுபான்மை இனங்களின் நலன்களும் நியாயமான உரிமைகளும் திட்டமிட்டு புறக்கனிக்கப்பட்டே இந்த அடையாளம் சாதிக்கப்பட்டுள்ளது.

இம் முயற்சிகள் பிற்பட்டகாலங்களில் கடுமையாக முன்னெடுக்கப்பட்டன. வரலாறு, தொல்லியல்,கலை இலக்கியங்கள்,மற்றும் கல்வித்துறை போன்றனவும் இந்த அடையாளத்தை நிறுவவும்,பரவலடையச்செய்யவும் பயன்படுத்தப்பட்டன. எனவே சிங்கள பௌத்த அடையாளப்படுத்தலுக்கான முயற்சிகள் கோட்பாட்டுரீதியாக ஏலவே தொடங்கப்பட்டாயிற்று. வட-கிழக்கில் இதுவரை காலமும் நிலவி வந்த நெருக்கடி மிக்க அரசியற் சூழல் காரணமாக அரசியல் பௌத்தவாதிகளால் வட-கிழக்குக்கு நடைமுறைசார்ந்து இதைப்பரவலடையச் செய்யமுடியாத நிலை இருந்தது. இலங்கையின் மொத்தத்துவ அடையாளமாகவும் சிங்கள பௌத்தத்தைக் கொண்டு வருவதில் காணப்பட்ட நேரடிச்சவால் இன்று கிழக்கில் இல்லாமல் போனதனால் கிழக்கை சிங்களமயப்படுத்தும் முயற்சிகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

சிங்கள பௌத்தத்தை அடையாளப்படுத்தும் முயற்சிகள் வரலாற்றுத் தொல்லியல் துறைகளில் கருத்தியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்டது. கோட்பாட்டுரீதியான முன்னெடுப்புகள் நோக்கத்தின் அரைவாசி நிலையைப்பூர்த்தி செய்தன.மிகுதி இன்று நடைமுறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சிறுபான்மையினர் நேரடியான பாதிப்புகளுக்குள்ளாகி வருகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீக எல்லைக்குள் அண்மையில் முளைத்த புத்தர் சிலைகள்,புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள தமிழ்-முஸ்லிம் பிரதேசங்களுக்கு இறந்த இராணுவ உயர் அதிகாரிகளின் பெயர்களைச்சூட்டல், கிழக்கு மற்றும் தென்கிழக்குப்பல்கலைக்கழக விவகாரங்கள் போன்றன சிங்கள பௌத்த அடையாளத்துக்குள் கிழக்கையும் கொண்டு வரும் பாரிய முயற்சிகளின் சில கட்டங்களாகும். ‘மே புதுன்கே தேசய’ என்று எழுப்பப்படும் கதையாடல்கள் மேலும் வலுவடைவதற்கே இன்னும் சாத்தியங்கள் தென்படுவது போன்றுள்ளது. இது போன்ற பெரும்பான்மையின நலன் சார் செயற்பாடுகளுக்காவே சிஙகள- பௌத்த அடையாளம் இன்று பேரினவாத அடையாளமாக மட்டுமே சிறுபான்மையினருக்கு முன்னால் எஞ்சிப்போயுள்ளது.
நாட்டின் தேசிய அரசியற் சூழலும் சிங்கள பௌத்த அiயாளத்தின் இருப்பையும், தொடர்ச்சியையும் மேலும் உறுதிப்படுத்துவதற்கான களங்களையே திறந்துள்ளன. எனினும் சிறுபான்மைத் தேச அடையாளங்கள் அனைத்து அதிகாரங்களையும் தாண்டி நிறுவப்படுமாக இருந்தால் அரசியல் பௌத்தவாதிகளின் முயற்சியில் நெருக்கடி ஏற்படக்கூடும். ஒற்றைத் தேசமாக உருவெடுக்க முனைந்த பல தேசங்கள் அடையாளமின்றிப்போயுள்ள காலப்பகுதியில் வாழும் மக்களாகிய நாங்கள் புதிய நம்பிக்கையுடன் இது தொடர்பில் செயலாற்றவேண்டும்.

அரசியல் பௌத்தத்தின் கலாசாரக் காட்சிகள்

அரசியல் பௌத்தம் கலாசாரரீதியாகவே கட்டமைக்கப்பட்டு வந்துள்தை இலங்கையின் இனமுரண்பாட்டு அரசியல் வரலாற்றிலிருந்து அறிய முடியுமாகவுள்ளது. சுதந்திரத்துக்குப் பின் இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஒன்றையொன்று சளைக்காத வகையில் இந்த முயற்சியைத் தீவிரப்படுத்தின. இந்த அரசாங்கங்கள் தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒற்றைக் கலாசாரத் தேசியமொன்றை இலங்கையில் நிறுவ முயன்றன. இலங்கையின் ஒட்டுமொத்த அடையாளமாகவும் சிங்கள-பௌத்த கலாசாரத்தை கட்டமைக்க முனைந்த காட்சிகளை இந்த அத்தியாயம் சுருக்கமாக ஆராய்கிறது.

அரசியல் பௌத்தத்தின் கலாசராக் காட்சிகளைப் புரிந்துகொள்வதற்கு முதலில் கலாசாரம் (Culture) என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமூகம் கொண்டிருக்கும் அறிவு,நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும் மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்றுக்கொள்ளும் பிற திறமைகளும் பழக்கங்களுமே கலாசாரம் என்று மானிடவியலாளர்களால் வரையறுக்கப்பபடுகிறது. மேலும் இவர்கள் கலாசாரத்தை பொருள்சார் கலாசாரம் (Material culture), பொருள்சாரா கலாசாரம் (Immaterial Culture) என பிரித்து நோக்குகின்றனர். இதில் பொருள்சார் கலாசாரத்துக்குள் மனிதனால் உருவாக்கப்பட்ட கலைகள், கட்டடங்கள், ஆடைகள் போன்ற பொருள்சார்ந்த விடயங்களும் பொருள் சாராக் கலாசாரத்தினுள் மதம், மொழி, நம்பிக்கை போன்ற பொருள்சாராத விடயங்களும் இடம்பெறுகின்றன.

இந்தவகையில் பார்க்கும்போது மொழி, மதம், பழக்கவழக்கங்கள், கல்வி, அபிவிருத்தி, கலை இலக்கியங்கள், வரலாறு, கட்டங்கள், ஆடைகள், சினிமா மற்றும் குறியீடுகள் போன்ற அனைத்தும் கலாசாரக் கூறுகளாகவேயுள்ளன. இலங்கையில் வாழும் மூன்று பிரதான இனங்களும் இவைகளில் பெரும்பாலானவற்றைத் தனித்தனியாக கொண்டுள்ள வித்தியாசமான தேசங்களாகும். ஆனால் துரதிஸ்டவசமாக இலங்கையின் அரசாங்கங்கள் இந்த வித்தியாசங்களை ஏற்றுக் கொண்டு பல்-கலாசாரத் தேசமாக இலங்கையை உருவாக்கத் தவறின. மாறாக பெரும்பான்மையின கலாசார அடையாளத்துக்குள் இலங்கையின் தேசிய அடையாளத்தைக் கொண்டுவர முனைந்தன. அத்தகைய கலாசாரக் காட்சிகள் இலங்கையின் வரலாற்றுப் போக்கில் பல்வேறு தருணங்களில் அரங்கேற்றப்பட்டுள்ளன. சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பைக் கையேற்ற சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள பௌத்த கலாசாரத தேசியமொன்றை உருவாக்கும் வகையில் அரசாங்க இயந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

சிங்கள- பௌத்தத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சி காலனித்துவ காலத்திலேயே தொடங்கி விட்ட போதும் அரச அதிகாரத்தின் மூலம் 1956ம் ஆண்டே அது முதன் முதலாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1956ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ளுறுசுனு பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசியல் பௌத்தத்தின் முதலாவது கலாசாரக் காட்சியை அரங்கேற்றியது. தனிச்சிங்கள மொழிச் சட்டத்தினை அது கொண்டுவந்தது. மொழி ஒரு முக்கிய கலாசாரக் கூறாகும்.

இலங்கையின் சுதேச மொழிகளாக சிங்களமும்- தமிழும் விளங்கிய போதும் சிங்களம் மட்டும் அரசாங்கத்தினால் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டது. இது ஒரு மொழிக் கலாசாரத் தேசத்துக்கே பொருத்தமானதாகும். இலங்கைக்கல்ல: சிங்களக் கலாசாரத்தின் மொழியாக சிங்களம் இருந்தமையாலேயே அதற்கு இந்த முக்கியத்துவம் வழங்கப்பட்;டது. இதற்கு வேறு வியாக்கியானங்கள்- தர்க்;கங்கள் முன்வைக்கப்பட்ட போதும் இந்நிகழ்வு அரசியல் பௌத்தத்தின் கலாசார வேர்களை நிதானமாக ஒரு முறை மீளாய்வு செய்வதன் அவசியத்தை வேண்டுகிறது இந்த நிகழ்வுக்குப் பின்னால் இலங்கையை ஒரே கலாசாரத் தேசியமாக கட்டமைக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருக்கலாம் என்ற சந்தேகத்தை இப்போது நம்மால் எழுப்ப முடியுமாக உள்ளது. ஏனெனில் சர்வதேச அளவில் பல்வேறு வித்தியாசமான கலாசாரத் தேசங்களை ஒரே மொழிக்குள் கொண்டு வந்து ஒற்றைத் தேசமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு மொழியை அரசியல் அதிகாரத்தி;ன் மூலம் எல்லா மக்களுக்குமானதாக்கி ஏனைய மொழிகளிலிருந்து அந்தந்த மக்களை விடுபடச் செய்து உருவாக்க விரும்பும் கலாசாரத் தேசத்துக்கான மொழியுடன் எல்லா மக்களையும் சங்கமிக்கச் செய்யும் நடவடிக்கைகள் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். ஐரோப்பாவில் 17ம், 18ம் நூற்றாண்டுகளில் தேசிய அரசுகள் ஒரு தேசிய இனத்துக்கு ஒரு அரசு என்ற அடிப்படையில் உருவாகின. பிரான்ஸ், இத்தாலி போன்ற தேசங்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

பல்வேறு மொழிகளைப் பேசும் இனக்குழுமங்களைக் கொண்ட பிரான்ஸ் அரச இயந்திரத்தின் துணையுடன் பிரான்ஸ் மொழியை வலுக்கட்டாயமாக இணைத்து பிரான்ஸ் தேசத்தை உருவாக்கிக் கொண்டது. இத்தாலியும் இப்படித்தான் உருவாக்கப்பட்டது. வேறு மொழிகள் பேசிய பல்வேறு சமூகங்கள் இத்தாலிக்குள் இருந்த போதும் அந்த மொழிகள் பறக்கணிக்கப்பட்டு இத்தாலி மொழியை அரச அதிகாரத்தின் மூலம் கட்டாயமாக்கி இத்தாலியர்கள் இத்தாலி என்ற நாட்டுக்காக உருவாக்கப்பட்டனர். வேறு மொழிகளை பேசுபவர் தங்களது மொழி, மதம், கலாசாரம், பழக்கவழக்கங்கள் என்பன வேறாக இருந்த போதும் இத்தாலி மொழிக்கு அவர்கள் மாற்றப்பட்டதோடு அந்த மொழியின் மதத்தையும் கலாசாரத்தையும் தழுவிக் கொள்ள வைக்கப்பட்டனர். பிரான்ஸிலும் இதே நிலைமைதான் இருந்தது.

இலங்கையில் சிங்களம் அரச கரும மொழியாக்கப்பட்டதன் மூலம் சிறுபான்மைத் தேசங்கள் தமது மொழியைவிட்டு சிங்கள மொழியின் மதம், கலாசாரம், ஏனைய பழக்க வழக்கங்களுக்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் பௌத்தவாதிகளிடம் எந்தளவு தூரம் இருந்திருக்கும் என்பது கேள்விதான். எனினும் குறைந்த பட்சம் பெரும்பான்மை இனத்தின் கலாசார நலன்களோடு ஒத்துப் போகும் குடிமக்களாகவேணும் தேசிய சிறுபான்மையினர் இருக்கவேண்டும் என இந்நடவடிக்கை முலம் அவர்கள் நாடியிருக்கலாம்.

1972ன் அரசியல் யாப்பு மூலம் மற்றுமொரு அரசியல் பௌத்தத்தின் கலாசாரக் காட்சி எங்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த யாப்பில் பௌத்த மதம் அரச மதமாக பிரகடனப்படுத்தப்பட்டது. சிறுபான்மையினரின் மதங்கள் இந்த ஏற்பாட்டின் மூலம் தெளிவாகப் புறக்கணிப்புக்குள்ளாகின. இந்த ஏற்பாடு வெளிப்படையாகவே இலங்கை அரசை பௌத்த அடையாளத்துக்குள் கொண்டு வந்த ஏற்பாடாக அமைந்திருந்தது. அரசின் பல்வேறு செயல்பாடுகளில் பௌத்த அடையாளம் தூக்கலாகத் தெரிந்தது. அரச நிகழ்வுகளில் பிக்குகள் முக்கியத்துவப்படுத்தப்பட்டமை, பௌத்த குறியீடுகள் பெரும்பாலும் பிரயோகிக்கப்பட்டமை, சிங்களக் கலாசார நடைமுறைகள் பின்பற்றப்பட்டமை போன்றவற்றிலிருந்து அதன் தீவிரத் தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிரயாணங்களின் போது பௌத்த குருமார்களுக்கு ஆசனங்கள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய நிலை இருக்கும் அதே வேளை சிறுபான்மை இனங்களின் மதகுருக்கள் உதாசீனம் செய்யப்படும் நிலையே இன்னும் தொடர்கிறது.

அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பெரும்பான்மை நலன்களே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் பொருளாதாரத்துறையை காலனித்துவ காலத்தின் ஆட்சியாளர்களினால் கடுமையான மேற்குச் சார்பான முதலாளித்துவப் பொருளாதாரமாக ஆக்கப்பட்டது. இலங்கையில் உருவான இடதுசாரிகள் சோஷலிசப் பொருளாதாரத்துடன் நெருக்கமாகினர். இவ்விரு வெளிநாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையிலேயே இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியும் நோக்கப்பட்டது. முன்னெடுக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் அரசு மேலாதிக்கம் செலுத்தும் அரசியல், பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதனை காணமுடியுமாகவுள்ளது.

அரசு மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் தெளிவாக கலாசாரக் காட்சிகளை, பெரும்பான்மை இன அடையாளங்களைக் காணமுடியுமாகவிருந்தது.

அரசில் மிக முக்கியமான தொழிற்றுறைகளில் சிங்களவர்கள் அமர்த்தப்பட்டனர். அரசாங்கத்தின் மிக முக்கியமான பொறுப்பக்களில் கூட (நிர்வாகம் போன்ற துறைகளிலும் ) சிங்களவர்களே பெரும்பான்மையாக அமர்த்;தப்படுகின்றனர். இது போன்ற துறைகளில் சிறுபான்மையினருக்கு அவர்களின் விகிதாசாரத்துக்கேற்ற வகையிலும் இடம் ஒதுக்கப்டுவதில்லை. இது குறித்து சிறுபான்மை மக்கள் மிக நீண்ட காலமாகவே தமது மனக்குறையை வெளிப்படுத்தி வருகின்றனர். தனியார் துறைகளிலும் முக்கிய பொருளாதார முயற்சிகளில் பெரும்பான்மையினருக்கே சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசுடன் இணைந்து அல்லது தனியார் துறையினர் தனியாக மேற்கொள்ளும் ஏற்றுமதி,இறக்குமதிப் பொருளாதார நடவடிக்கைகளின்போது பங்கு (Quotas) இசைவாணை (permits)இ அனுமதிப்பத்திரம்; (license) போன்றன பெரும்பான்மையினருக்கே இவைகள் வழங்கப்படுகின்றன. மகாவலி அபிவிருத்தித்திட்டம் போன்ற குடியேற்றத்திட்டங்களிலும் பெரும்பான்மை நலன்களே கவனத்திற் கொள்ளப்பட்டன என்பதை நாம் இங்கு நினைவுபடுத்திப்பார்க்க வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னர் தேசியக் கொடி உருவாக்கத்தின் போதும் தனிச் சிங்கள பௌத்த அடையாளங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தேசியக் கொடி உருவாக்கப்பட்டது. தேசியக் கொடி உருவாக்கத்திற்கான ஆணைக்குழுவில் சிறுபான்மையினப் பிரதிநிதிகள் எவரும் நியமிக்கப்படாமை சிறுபான்மையினர் மத்தியில் ஒரு மனக் குறையாக வெளிப்பட்டது. இத் தேசியக் கொடியில் சிறுபான்மையினரின் அடையாளங்களை உள்ளடக்குமாறு சிறுபான்மையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டே தனிச் சிங்கள பௌத்த அடையாளங்களோடு முதன் முதல் தேசியக் கொடி உருவாக்கப்பட்டது.

பெரும்பாலான அரச விழாக்கள், பொது இட நிகழ்வுகள் என்பன சிங்கள பௌத்த அடையாளங்களையே பிரதிபலிக்கின்றன. சிறுபான்மையினரின் கலாசாரத் தன்மைகள் புறக்கணிக்கப்பட்டு சிங்கள கலாசார அம்சங்களே பெரும்பாலான அரசின் பொது நிகழ்வுகளில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறான நிகழ்வுகளின் போது பனை ஓதுதல் பௌத்த மத குருமார் கௌரவமளிக்கப்படல், சிங்களப் பாரம்பரிய நடனம், தனிச் சிங்கள உரைகள் போன்றவையே அரசின் இத்தகைய பொது நிகழ்வுகளை அலங்கரிக்கின்றன. இது ஒரு வகையான அரசியல் பௌத்தத்தின் குறியீடு சார்ந்த (symbolic dimension) பரிமாணமாகும். இலங்கையின் தேசிய கலாசாரமாக சிங்களப்பண்பாட்டை முன் கொண்டு வரும் நடவடிக்கையாவே இன்று சிறுபான்மையினர் இதனை நோக்குகின்றனர்.
உள்நாட்டு நகழ்வுகளில் மட்டுமன்றி எமது நாட்டை வெளிநாடுகளில் பிரதிநித்துவப்படுத்தும் போதும் பௌத்த அடையாளமே பெரும்பாலும் பிரதிபலிக்கப்படுகிறது. இது பிற அரசுகளின் பொதுப்புத்தியில் இலங்கையை ஒரு தனியான பௌத்த தேசமாக பதிவுசெய்துவிடும் என சிறுபான்மைத் தேசங்கள் கருதுகின்றன.

நாணயத்தாள்களில் கூட பௌத்த அடையாளச் சின்னங்களின் பிரதிபலிப்பைக் காணக்கூடியதாகவுள்ளது. சந்திரவட்டக்கல்; பௌத்த விகாரைகள், பெரஹராக்கள் போன்ற பாரம்பரிய சிங்கள பௌத்த அடையாளங்கள் இலங்கையின் நாணயத்தாள்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நாணய அலகு ஒரு அரசின் அடிப்டையான மூலக்கூறகளில் ஒன்று என்ற வகையில் அதில் ஒற்றைக் கலாசார அடையாளத்தைத் தவிர்த்துவிடுவதே பொறுப்புள்ள அரசின் பணியாகும்.

இலங்கையின் கடந்த கால மற்றும் சமகால அரசியல் போக்குகளில் அரசியல் பௌத்ததின் கலாசாரக் காட்சிகளை தொடர்ந்தும் நாம் கண்ணுற்றவண்ணமே உள்ளோம். தற்போது அரசு மேற்கொள்ளப்;போகும் புதிய அரசியல் மாற்றங்களில் இத்தகைய கலாசார மேலாதிக்கப்போக்குகள் களையப்பட்டு சிறுபான்மைத் தேசங்களினதும் கலாசார ஒருங்கிணைவுடன் ஓர் புதிய இலங்கை கட்டியெழுப்பப்படுவதே இன்றை இலங்கையின் அவசியத் தேவையாகும்.

அரசியல் பிக்குகள்: துட்டகைமுனுவின் வாளில் பச்சை இரத்தம்

இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் பல்வேறு சக்திகளில் பௌத்த பிக்குகள் இன்று குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றனர். நேரடியான அரசியல் செயற்பாட்டைக்கொண்டிருக்கும் இவர்களை அரசியல் பிக்குகள் என அழைப்பதே பொருத்தமானது. இலங்கையில் நவீன அரசியலின் தொடக்கத்தின் பின்னர்,19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே பிக்குகளின் அரசியல் பிரவேசம் நிகழ்கிறது. இது காலனித்துவ காலத்தில் பிரித்தானியர் மேற்கொண்ட கிறிஸ்தவ மத மாற்ற நடவடிக்கைகளை எதிர்த்து விக்கட்டுவத்த குணாநந்த தேரரும்,ஹிக்கடுவ சுமங்கல தேரரும் தொடக்கிய ‘பௌத்த மறுமலர்ச்சி இயக்கம்” என்பதுடன் தொடங்கியது. எனினும் 1946 காலப்பகுதியில் பிக்குகள் அரசியலில் ஈடுபடலாமா என்ற விவாதங்கள் மேற்கிளம்பின.

டி.எஸ்.சேனநாயக்கா,மற்றும் கண்டியிலுள்ள மல்வத்தை பிரிவெனாவைச்சேர்ந்த பிக்குகளும், ராமான்ய நிக்காரயச்சேர்ந்த பிக்குகளும், மகாபோதி சங்கத்தைச் சாராத பிக்குகளும் பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டித்தார்கள். எனினும் ஒரு கடும் போக்குடைய இளம் பௌத்த பிக்குகள் குழாமொன்று பிக்குகளின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக ஆதரித்தது. அதுமட்டுமன்றி அறிவுஜீவித்துவப்பரப்பிலும் இதை நியாயப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. வல்பொல ராகுல பிக்கு, பஞ்ஞாசார தேரோ போன்றவர்கள் பிக்குகளின் அரசியல் பிரவேசத்தை வலியுறுத்தியும் நியாயப்படுத்தியும் நூற்களைவெளியிட்டனர்.

இன்றைய நிலையில் பிக்குகளின் அரசியல் நடவடிக்கைகள் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகவும்,தனிக்கட்சி அரசியலாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.பெரும்பான்மையின சிங்கள பௌத்தர்கள் பிக்குகள் மீது கடுமையான அன்பும்,மரியாதையும் கொண்டிருக்கும் அதேவேளை சிறுபான்மையின மக்கள் அவர்கள் மீது வெறுப்பையும் அவநம்பிக்கைiயுமே வெளிப்படுத்துகின்றனர்;. அஹிம்சை,கருணை,கொல்லாமை போன்ற உன்னத கோட்பாடுகளை வலியுறுத்தும் பௌத்தத்தின் மதகுருக்களான பிக்குகள் இலங்கையின் இனமுரண்பாட்டு அரசியலில் கடும்போக்கு மனோபாவத்துடன் நடந்து கொள்வதனாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிரானவர்களாகவே இருந்து வருவதனாலும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அவர்கள் குறித்து பொதுவாக நல்லபிப்ராயம் நிலவுவதில்லை. மனித உயிர்கள் பலியிடப்படும் யுத்தத்தை முழுமையாக ஆதரிக்கும் பௌத்த பிக்குகள் சமூகவியல்-அரசியல் தளங்களில் இன்று கடுமையான முஸ்லிம் விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். பௌத்த பிக்குகள் அரசியல்மயப்பட்டு வருவதனாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களின் சமூகவியல் அரசியல் ஒழுங்குகளில் பௌத்த பிக்குகள் கக்கும் எதிர்க்கதையாடல்கள் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலமைந்துள்ளது. பௌத்த பிக்குகளின் எதிர்-சிறுபான்மை நடவடிக்கைகள்; ஆராயப்படவேண்டியதே.

வரலாறும் அரசியல் பிக்குகளும்

‘உங்களால் ஒரு விசயத்தைச் சரியாகச் செய்ய முடியாவிட்டால் அதை மோசமாகச் செய்து சந்தோசமடையக்கற்றுக்கொள்ளுங்கள்.’
– தொல்லியலறிஞர் பவுல் பான்-

இலங்கையின் தொல்லியலுக்கு பவுல் பானின் இக்கூற்று மிகவும் பொருந்தி வருவதாகவுள்ளது.இலங்கையின் சிங்கள–பௌத்த தொல்லியலாளர்கள் இலங்கையின் தொல்லியல் துறையை மிக மோசமான நிலைக்கு இட்டுச்சென்று சந்தோசமடைந்து கொண்ருடிக்கின்றனர். வரலாற்றை விஞ்ஞானபூர்வமாக அறிக்கைப்படுத்தும் போது தொல்லியல் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.பெரும்பாலும் வரலாறு வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டத்துடனும் அவர்களது பக்கச்சார்புடனுமே எழுதப்படுகிறது. தொல் பொருளியல் வரலாற்றெழுதுதலில் ஏற்படும் இக்குறைபாட்டைத் தணிக்க உதவுகிறது. தொல் பொருளியல், வரலாற்றை விஞ்ஞானபூர்வ தரவுகளின் அடிப்படையில் கட்டியெழுப்புகிறது. ஆனால் இலங்கைத்தொல்லியலில் அவ்வாறான நிலைமைகளில்லை. இலங்கைத்தொல்லியலானது அரசியல் பௌத்தத்தின் தீவிர செல்வாக்குக்குட்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் தொல்லியல் ஆய்வுகள் இலங்கையின் வரலாற்றெழுதுகைக்கு நம்பகத்தன்மையை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று நம்மத்தியில் இல்லை. சமகால இலங்கையின் தொல்லியல் ஆய்வுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடுகளும் சிங்கள-பௌத்தத்தை பாதுகாப்பதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் ஏற்றவகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.துரதிஸ்டவசமாக இவை சிறுபான்மை இனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் தனது ஆய்வுமுடிவுகளை வெளிப்படுத்துகின்றன.இலங்கை சிங்களவர்களுக்கேயுரியது என்ற கருத்து சிங்கள சமூகத்தில் வலுவாக பதிக்கப்படுவதற்கு ஏற்றவகையில் தொல்லியல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஜாதிக ஹெல உறுமய,பூமிபுத்திர போன்ற சிங்கள பௌத்த அடிப்படைவாத இயக்கங்களுக்குள் மட்டுமிருந்த இக்கருத்துநிலை இன்று அதற்கு வெளியேயும் வியாபித்து வருகிறது. அண்மையில் இராணுவத்தளபதி “நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது” என வெளியிட்ட கருத்து இதன் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.

தனிச்சிங்கள பௌத்த வரலாறாக இலங்கையின் வரலாறைக்கட்டமைக்கும் பணி மகாவம்சத்திலிருந்து தொடங்குகிறது.மகாவம்சம் கூறும் கருத்துக்கள் நாடகங்கள் மூலமும் பின்னர் நவீன நாடகங்கள் மூலமாகவும் வியாபித்தது.நவீன பௌத்தத்தின் சடங்கு சம்பிரதாயங்களும் கூட மறைமுகமாக சிங்கள தீப(சிங்களத்தீவு) என்ற கருத்தியலைப்பிரதிபலிக்கும் வகையிNலுயே அமைக்கப்பட்டு வருகின்றன.எனவே மகாவம்சம் மறுவாசிப்பு(de-construction)க்குட்படுத்தப்பட வேண்டும்.

இலங்கைத்தொல்லியல் அதன் தீவிர பௌத்;த சார்பியம் காரணமாகவே சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. எனினும் இச்சர்ச்சை தமிழர்களின் வரலாற்றைக்குறுக்கும் முயற்சிகளுக்கு எதிர்வினையாக மேற்கொள்ளப்பட்டது. சுருங்கக்கூறின் இலங்கைத்தொல்லியலின் சர்ச்சையானது சிங்கள- தமிழ் வரலாறுகளுக்கிடையிலான மோதலாக மட்டுமே பார்க்கப்பட்டது. பெரும்பாலும் இலங்கைத்தொல்லியலின் இச்சர்ச்சை அநுராதபுர தக்கிண விகாரையின் அடித்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சாம்பல் படை எல்லாள மன்னனுடையதா? அல்லது துட்டகைமுனு மன்னனுடையதா? என்பதுடன் தொடர்புபடுகிறது.

இப்போது அரசியல் பௌத்தம் முஸ்லிம்களுடனும் வரலாற்று மோதுகை உறவொன்றை ஏற்படுத்திள்ளது. முஸ்லிம்களின் வரலாற்று நீட்சியை குறுக்கி வந்தேறு குடிகள் என்ற சர்ச்சையை மேலும் ஒரு முறை கிளப்பியுள்ளது.
முன்பொருமுறை சிரில் மெதிவ் யுனெஸ்கோ உதவியுடன் நூலொன்றை வெளியிட்டிருந்தார். இந்நூல் மூலம் அவர் சாதிக்க நினைத்தது என்னவென்றால், வட-கிழக்கு மாகாணங்களில் சிங்கள தொல்பொருட்கள் உண்டென்று நிரூபித்து அதனூடாக சிங்கள பூர்வீகக் கோட்பாட்டை ஊர்ஜிதப்படுத்துவதுதான். பெரும்பாலும்(வெளிப்படையாகச் சொல்வதானால்) அதனை அவர் தமிழ் மக்களின் பூர்வீக உரிமத்துக்கெதிராக மேற்கொண்டார். இன்று அதன் தொடர்ச்சியாக அவரது வழிவந்தவர்கள் முஸ்லிம் மக்களின் பூர்வீகத்துக்கும்; எதிரானதாக அமைத்தக் கொண்டனர்.தொல் பொருளியலையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைத்துக் கொண்டு அவர்கள் இன்று இந்த அருவருக்கத்தக்க செயற்பாட்டினை மேற்கொள்கின்றனர்.இதிலிருந்து சிங்கள பூர்வீகக்கோட்பாடும் கட்டமைக்கப்பட்ட பெருங்கதையாடல் மட்டுமே என்பது நிரூபனமாகிறது.இலங்கையின் பிரபல தொல்பொருளியல் விஞ்ஞான அறிஞர் ராஜ் சோமதேவா இலங்கையை பௌத்த தேசமாக தொல் பொருளியல் ரீதியாக கட்டமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஏற்றுக் கொள்ளும் ஒருவரல்ல் உண்மையான ஆய்வுத்தகவல்களோடு அதனை நிராகரித்து விடுகிறார்.சிங்களவர்களும் ஏதோ ஒருவிதத்தில் வந்தேறு குடிகள்தான் எனபதாகத்தான் இவரது கருத்து அமைந்திருக்கிறது.

இந்நிலையில் அரசியல் பிக்குகள் முன்வைக்கும் கருத்துக்களும் வரலாற்றுவாதங்களும் அடிப்படையற்றவையாகும.; ஆனால் இலங்கையை சிங்களவர்களுக்குரிய நாடாகக் கட்டமைப்பதிலும் சிறுபான்மைத் தேசங்களை வந்தேறு குடிகளாகவும் வரலாரற்றவர்களாகவும் காட்டும் முயற்சியிலும் இன்று அரசியல் பிக்குகள் களமிறங்கியுள்ளனர். வரலாறு சார்ந்து தற்போதும் தேசிய சிறுபான்மை மக்களின் வரலாற்று நீட்சியை குறுகலானதாக கட்டமைக்க முனைகிறார்கள்.

அரசியல் பிக்குகள் சிறுபான்மையினரை வரலாற்று இருட்டடிப்புச் செய்வதன் நோக்கம் வெளிப்படையானது. கிழக்கில் சிறுபான்மையினரே மக்கள் தொகையில் அதிகப்படியாகவுள்ளனர.; கிழக்கை சிங்கள மயப்படுத்துவதற்கு சிறுபான்மையினரின் பூர்வீகத்தின் மீது முதலில் புனைவுகளை உருவாக்கி அவர்களை அந்நியமானவர்களாகக் காட்ட வேண்டும். அதன்பின்னரே அவர்களின் ப+ர்வீக நிலங்களில் சிங்கள ;குடியேற்றங்களை அமைப்பது உசிதமானது என அரசியல் பிக்குகள் கருதுகின்றனர். கிழக்கு மாகாண சபை அரசாங்கம் நிறுவப்பட்டபோது காணி பொலிஸ் அதிகாரங்கள் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்படக்கூடாது என ஜாதிக ஹெல உருமய கூறியதுடன் வெளிப்படையாகவே அங்கு சிங்களக்குடியேற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

போகிற போக்கில் நமது வரலாறு ஜாதிக ஹெல உருமயவினால் எழுதப்படும் நிலை உருவாகிவிடும் போலிருக்கிறது. அரசியல் பிக்குகளின் இந்த வரலாற்றுப் போரை எதிர்கொள்ளும் நிலைக்கு இன்று தேசிய சிறுபான்மையினர் தள்ளப்பட்டுள்ளனர். அரசியல் பிக்குகள் மேற்கொள்ளும் இந்த எதிர்-சிறுபான்மை வரலாற்று நடவடிக்கைகள் தற்செயலானவையல்ல. இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை அநகாரிக தர்மபால மற்றும் கொலினல் ஒல்கொட் ஆகியோரின் எழுத்துக்களிலும் நடவடிக்கைகளிலுமே தேடவேண்டியுள்ளது.

அநகாரிக தர்மபால

இலங்கையில் காலணித்துவத்துக்கெதிராக செயற்பட்ட முக்கிய அரசியல் செயற்பாட்டாளராக அடையாளம் காணப்பட்ட இவர் இலங்கையில் முஸ்லிம்களின் பூர்விகம் தொடர்பில் குறுகிய பார்வையைக் கொண்டிருந்தார். இவர் தனியான பௌத்த-சிங்கள அடையாளத்தை நிறுவுவதற்கான பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கெதிராக இலங்கையில் ஒரு பண்பாட்டுத் தேசிய வாதத்தை கட்டியெழுப்புவதில் இவரது பங்களிப்பே அதிகமுள்ளது. பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை நிறுவி தனது காலனித்துவ சக்திகளுக்கெதிரான தனது செயற்பாடுகளை ஒழுங்கமைத்தார். இதனால் சிங்கள பௌத்த சமூகத்தில் ஒரு முக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளராக இவர் கருதப்பட்டார். எனினும்சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் குறித்த அவரது கருத்துக்கள் தவறானவையாகவும் வன்முறையைத் தூண்டக் கூடியதாகவும் அமைந்தன.

மத அரசியல் பொருளாதார அதிகாரங்கள் அனைத்தையும் சிங்கள பௌத்தர்கள் தங்களது கையில் எடுக்க வேண்டும் என்ற கொள்கையையே அவர் கொண்டிருந்தார். முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் எதிரான சிந்தனைகளை தர்மபால மக்கள் மயப்படுத்தினார். சிங்கள பௌத்த தேசியவாதிகள் முஸ்லிம்களுக்கெதிராக தர்மபாலவின் கருத்துக்களினால் தூண்டப்பட்டனர். தர்மபால ஒருமுறை இப்படி எழுதினார்,

“முஹம்மதியர்கள் அந்நியமானவர்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் அவர்கள் பொதுவாக வர்த்தகர்களாகவே இருந்தனர். Shylock (Shylock என்பது சேக்ஸ்பியரின் ‘வெனிஸ் நகர வியாபாரி’ எனும் நாடகத்தில் வரும் அநியாய வட்டி வாங்கும் ஒரு கதாபாத்திரம்) பாணியில் யூதர்களைப் போன்று நல்ல முன்னேற்றத்துக்கு வந்தார்கள். சிங்களவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்கள், அவர்களுடைய முன்னோர்கள் நாட்டை அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து 2358 ஆண்டுகளாகப் போராடி பாதுகாத்தனர்…இன்று…அவர்கள் (முஸ்லி;ம்கள்) பிரித்தானியரின் முன்னால் நாட்டை அபகரிப்பவர்களாகவுள்ளனர். அந்நியர்களான தென்னிந்திய முஹம்மதியர்கள் இலங்கைக்கு வருகிறார்கள். வர்த்தகத்தில் எந்த வித அனுபவமுமில்லை என கிராமவாசிகள் புறக்கணிக்கபக்படுவதைக் காண்கிறோம்…இதன் விளைவாக முஹம்மதியர்கள் வளர்ச்சியடைந்து கொண்டு போகிறார்கள். மண்ணின் மைந்தர்களோ அதாளபாதாளத்துக்குள் போய்க்கொண்டிருக்கிறார்கள்.’’

அநாகரிக தர்மபால வலியுறுத்திய இக் கருத்து சிங்கள பௌத்த உணர்வை மேலும் கூர்மைப்படுத்தவே வழி வகுத்தன. காலனித்துவ காலத்தில் இலங்கையில் இடம் பெற்ற சிங்கள- முஸ்லிம் இன மோதல்களின் பின்னால் அநாகரிக தர்மபாலவின் இக் கருத்துக்களே முக்கிய அடித்தளமாக அமைந்திருந்தன. முஸ்லிம்களின் பொருளாதாரம் மற்றும் சமய நடவடிக்கைகள் மீதான காழ்ப்புணர்வுகள் காரணமாகவே இவர்கள் இவ்வாறு சிந்திக்கத் தலைப்பட்டனர்.

அநாகரிக தர்மபால கொண்டிருந்த இக் கருத்து நிலை அவருடன் மட்டும் முற்றுப் பெற்று விடவில்லை. அவரின் வழி வந்தவர்களால் இக் கருத்துக்கள் சிங்கள சமூகத்தளத்தில் மேலும் கருத்தாடலுக்குக் கொண்டு வரப்பட்டன. இன்று அரசியல் பிக்குகள் வெளிப்படுத்தும் கருத்துக்களும் கொண்டிருக்கும் நிலைப்பாடுகளும் இவரது சிந்தனைகளின் தொடர்ச்சியாகவேயுள்ளன. அநகாரிக தர்மபாலவையடுத்து இக் கருத்து நிலையை மிகப் பரந்தளவில் முன்னெடுத்தவராக கங்கொடவில சோமதேரர் உள்ளார்.

கங்கொடவில சோமதேரர்

கங்கொடவில சோமதேரர் இலங்கையில் அவரது சமயப்பணிகளுக்காகவும் அரசியல் கருத்து நிலைகளுக்காகவும் நன்கு அறியப்பட்டவர். எனினும் உள்நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லிம்களின் நன் மதிப்பை அவர் பெறத் தவறினார். முஸ்லிம்கள் குறித்து அவர் கொண்டிருந்த நிலைப்பாடுகளே இதற்கு காரணமாய் அமைந்தது.

இவரது கருத்து நிலைகளும் பணிகளும் சிங்கள பௌத்த சமூகத்தில் மிகவும் பிரபலமானவை. அவர் தனிப்பட்ட ரீதியில் கொண்டிருந்த கருத்து நிலையை பொதுமைப்படுத்துவதற்கு முயன்றார். அவரது காலத்தில் இந்த முயற்சியில் அவர் சில வெற்றிகளை அடைந்தாலும் இன்று பிக்குகளின் ஒருங்கிணைந்த அரசியல் நுழைவையடுத்து இவை வலுவாக முன்னெடுக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் தோன்றியுள்ளன.

அரசியல் பிக்குகளின் ஜாதிக ஹெல உறுமயவின் தோற்றத்திற்கும் அதன் கருத்தியல் பின்னணிக்கும் சோமதேரரின் கருத்து நிலைகளே முக்கிய அடித்தளமாக உள்ளன. சிங்கள பௌத்த சமூகத்தில் ஒரு ஆன்மீக தலைவராகவும் சமூகத் தலைவராகவும் அவர் எல்லோராலும் அங்கீகரிக்கப்படுவதற்காக வேண்டி ஒரு அரசியல்வாதியின் பாணியில் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

சிங்கள – பௌத்த சமூக அடையாளத்தை வலுவாக நிறுவுவதும் பௌத்த கொள்கைகளை இலங்கையின்; அரசியல் சமூகத்தளங்களில் பரவலாக்குவதையும் அவர் முக்கிய நோக்கமாக கொண்டிருந்தார். இலங்கையின் அரசியல் தலைவர்கள் அதிகாரத்தை அடைவதற்காக இன முரண்பாட்டை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டது போல அவரும் சிங்கள பௌத்த சமூகத்தில் தனது அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் முஸ்லிம்களின் பூர்வீக, அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார உரிமைகளுக்கெதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முயன்றார்.

இலங்கையின் மிகப்பிரதான கொழும்பு போன்ற பெரும் வர்த்தக நகரங்களின் தமிழ்-முஸ்லிம் வர்த்தகர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கு குறித்து சிங்கள- பௌத்தர்கள் தவறான அபிப்ராயத்துக்கு வந்து சேருமளவுக்கு தனது பிரச்சாரங்களை முன்னெடுத்தார். இந்த பிரச்சாரங்களில் அவர் வெற்றி பெறுவதற்காக வேண்டி இனவாத கருத்து நிலைகளுக்குள் முற்றாக தஞ்சம் அடைய வேண்டி இருந்தது. குறிப்பாக முஸ்லிம்களின் வர்த்தக வளர்ச்சியை மையப்படுத்திய அவரது கருத்தியல் தளம் பின்னர் அவர்களது வரலாறு சமயம் கலாசாரம் என அனைத்து தளங்களிலும் முஸ்லிம் விரோதப் போக்கை அவர் கடைப்பிடிக்கும் நிலைக்கு அவரைத் தள்ளியது.

சிங்கள- பௌத்த சமூகத்தில் அவர் தனது கருத்து நிலையை பரவலடையச் செய்யவும் முன்னெடுத்துச் செல்லவுமான சமூகமாக இளைஞர்களை அடையாளம் கண்டார். இதனால் இளம் சமுதாயத்தினரை பௌத்த நெறிகளை நோக்கி அழைப்புவிடுத்தார். இளைஞர்களின் பிரச்சினைகள் குறித்து ஒரு சிறப்பான அணுகுமுறையொன்றையும் அவர் கையாண்டார். இளைஞர்களுக்கென ‘தருனு சவிய’ (Strength of the young) என்றொரு அமைப்பை ஸ்தாபித்தார். இந்த அமைப்பு மூலம் பாரிய வெற்றிகளை அவரால் சாதித்துக் கொள்ள முடியாவிட்டாலும் தாக்கமிகுந்த ஒரு அமைப்பாக அது சிங்கள சமூகத்தில் மாறக் கூடிய நிலை அவரது காலத்திலேயே தென்பட்டது

சோமதேரர் கிறிஸ்தவ மதத்தையம் கிறிஸ்தவ மத மாற்றத்தையும் தீவிரமாக விமர்சித்தவர். இலங்கையில் முஸ்லிம் அரசியலையும் அவர் வன்மையாக விமர்சித்தார். அவரது மரணத்தின் போது, அதற்கு ஒரு வருடத்தின் முன்னர் அவர் நிறுவிய ஒரு சிறு அரசியல் கட்சியின் தலைவராகவும் அவர் விளங்கினார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தார்மீக மீட்டெழுச்சிக்காகவும் தான் போட்டியிடப் போவதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
பேராசிரியர் ஜயதேவ உயங்கொட, மீள்பார்வை (2007)

எனினும் அவர் விட்டுச் சென்ற கருத்துக்களும் முன்னெடுக்க அவர் திட்டமிட்டிருந்த சில அரசியல் வேலைத்திட்டங்களும் தற்போது அரசியல் பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜாதிக ஹெல உறுமயவின் கருத்தியல் தளம் சோமதேரரின் கருத்தியலின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உருமயவின் கருத்தியல் தளம்

ஜாதிக ஹெல உறுமய (Jathika Hela Urumaya) அரசியல் பிக்குகளினால் குறித்த சில நோக்கங்களுக்காக 2004 பெப்ரவரியில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். கொலன்னாவ சுமங்கல தேரர், உடுவ தம்மாலோக தேரர், எல்லாவல மேதானந்த தேரர், கலாநிதி ஒமல்பெ சோபித தேரர், அத்தரலிய ரத்ன தேரர் மற்றும் திலக் கருணாரத்ன போன்ற பிக்குகள் இதன் ஸ்தாபகர்களாக் கருதப்படுபவர்கள். 2004 ஏப்ரல் 2 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாகப் போட்டியிட்டு பாராளுமன்றத்தின் மொத்த 225 ஆசனங்களில் 09 ஆசனங்களை அக்கட்சி பெற்றுக் கொண்டது. அதாவது இத் தேர்தலின்; மொத்த வாக்கு விகிதாசாரத்தில் 6.0% வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இந்த அரசியல் அதிகாரத்தின் உதவியோடு ஜாதிக ஹெல உறுமய தனது கருத்து நிலையை பரவலடையச் செய்யவும் நடைமுறைப்படுத்தவும் வாய்ப்பான களத்தைப் பெற்றுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் கருத்தியல் தளம் பன்மைத் தேசியங்கள் வாழும் இலங்கைக்குப் பொருந்தி வரக்கூடியதல்ல் இலங்கையின் இன ஒருமைப்பாட்டுக்கும் தேசிய அபிவிருத்திக்கும் சாதகமான வகையில் அதன் கருத்தியல் தளம் கட்டமைக்கப்படவில்லை.
1.இலங்கைத் தேசியத்தையும் மரபுரிமையையும் சிங்கள-பௌத்தமயப்படுத்துதல்.
2.சிறுபான்மைத் தேசங்களின் மரபுரிமையை மறுத்தல்.
3. பௌத்த அறவொழுக்கங்களை நடைமுறைப்படுத்தல்.

என்ற முப்பெரும் நிலைகளாக இதன் கருத்தியல் தளம் வெளிப்படுகிறது. ஜாதிக ஹெல உறுமயவின் கருத்தியல் தளத்தின் ஒரு பரிமாணத்தை அக்கட்சியின் பெயரே வெளிப்படுத்தி நிற்பதைக் காணலாம். ‘ஜாதிக ஹெல உறுமய’ என்பதன் தமிழ் வடிவம் ‘தேசிய மரபுரிமை (கட்சி)’ என்பதாகும். கட்சியின் இப்பெயர் அதன் கருத்தியல் தளத்தை வெளிப்படுத்தும் விதம் மிக நுணுக்கமாக பார்க்கப்படவேண்டும். ‘தேசிய மரபுரிமைக் கட்சி’ என்ற பெயரிடல் இலங்கையின் தேசியப் பாரம்பரியம் சிங்கள-பௌத்த அடையாளங்களுக்குட்பட்டது என்றும் இதற்கு வெளியே இலங்கையின் மரபுரிமையைக் கோரத் தகுதியானவர்கள் எவரும் இல்லை என்பதன் குறியீடாகவே வைக்கப்பட்டுள்ளது. சுருங்கக் கூறின், நாட்டின் தேசியம் சிங்கள பௌத்தர்களுக்கேயுரியது என்ற கருத்து நிலையை முன்னெடுத்தல், ஏனைய சிறுபான்மை இனங்களின் தேச உரிமத்தை மறுத்தல் என்ற நோக்கங்களை மையப்படுத்தியே இப்பெயரிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

JHU வின் கருத்தில் தளத்தை அதன் வலைப்பின்னல்களுக்கூடாகவம் புரிந்து கொள்ள முடியும். அது கொண்டிருக்கும் தொடர்புகள் இடைவினை (Interaction) புரியும் இயக்கங்களின் செயற்பாட்டெல்லை என்னபவற்றின் அடிப்படையிலும் அதன் கரத்தியல் தளம் குறுகிய சிங்கள பௌத்த நலன்களையே மையப்படுத்தியுள்ளது. JHU பயங்கரவாதத்திற்கெதிரான தெசிய இயக்கம் (National Movement Against Terrorism-NMAT), வட-கிழக்கு சிங்கள அமைப்பு (North-East Sinahala Organization-NESO),SPUR, உள்நாட்டு வெளிநாட்டு சிங்கள தேசியவாதக் குழுக்களுடனேயே இது நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளது. தேசிய அரசியலிலும் துர்ரு வின் ஆதரவு அதன் கருத்தியலை ஓரளவுக்கேனும் பிரதிபலிக்கும் கட்சிக்கே கிடைக்கிறது. ருNP யின் கொள்கைகள மேற்குலக முதலாளித்தவ சார்பியத்தைக் கொண்டிரப்பதால் துர்ரு அதனுடன் இணைவை ஏற்படுத்திக் கொள்வதில்லை. ளுடுகுP சிங்கள பௌத்த நலன்களைக் கவனத்திற் கொண்டு இயங்கம் கட்சி என்ற வகையில் அதனுடன் ஒரு இணைவை துர்ரு ஏற்படுத்தியுள்ளது. 2005 ஜனாதிபதித் தேர்தலில் துர்ரு மஹிந்த ராஜபக்ஸவுக்கே அதரவு வழங்கியது. 2007 ல் தனது ஆதரவின் உயர் பட்சமாக மஹிந்த அரசாங்கத்தின் ஒரு அங்கமாக மாறியது. இக்கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரனவக்க தற்போது சூழல் மற்றும் இயற்கைவளங்கள் அமைச்சராக உள்ளார். துர்ரு வின் இவ்விணைவுகள் அதன் கருத்தியல் தளத்தின் பிரதிபலிப்புகளேயாகும். தீவிர சிங்கள-பௌத்த கருத்தியலைப்பிரதிபலிக்கம் நிறுவனங்களே இவை. இவற்றுடன் சினேகபூர்மான உறவை துர்ரு ஏற்படுத்தியிருப்பது இதனது கருத்தியல் தளத்தையே அவையும் கொண்டிருப்பதாகும்.

அரசியல்ரீதியாக துர்ரு வின் கருத்தியல் தளம் சிறுபான்மையினங்களுக்க சவாலானதாகவே அமைந்துள்ளது. இலங்கை ஒற்றையாட்சி நாடாக இருக்க வேண்டும் என்பதில் அது உறுதியாகவுள்ளது. இதனால் அதிகாரப் பகிர்வை ஏற்க மறுக்கிறது. புலிகளின் போராட்டத்தை வெறும் பயங்கரவாதப்பிரச்சினையாக மட்டுமே JHU கருதுகிறது. மஹிந்த அரசாங்கத்தின் கொள்கைகளும் தற்போது JHU வின் கொள்கைகளின் தீவிர செல்வாக்கக்கட்பட்டிருப்பதையே இன்றைய தேசிய அரசியல் போக்குகள்; காட்டுகின்றன.

அரசியல் பிக்குகளின் உண்மை நிலை.

பிக்குகள் பௌத்த மதத்தைப்பாதுகாப்பதாகக் கூறுகின்றனர். இது அவர்களை பௌத்த அடிப்படைவாத மனேபாவத்துக்கு இட்டுச்சென்றுள்ளது. தமிழ் மக்களை அரசியல் பிக்குகள் சமூகவியல் கலாசார ரீதியாக ஒரு போதும் எதிர்த்து நிற்கவில்லை. புலிகளினதும் சில தமிழ் அரசியல் தலைவர்களினதும் அரசியல் கோரிக்கைகளையே அவர்கள் எதிர்க்கின்றனர்.ஆனால் மற்றொரு சிறுபான்மையினமான முஸ்லிம்களோடு அரசியல் பிக்குகள் கலாசார முரண்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். பெரும்பாலும் இந்த முரண்பாடு மதரீதியானதாகவே அமைந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அரசியல் பிக்குகள் மத மாற்றத் தடைச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கு பாரிய முயற்சியை மேற்கொண்டதையும் நாம் இங்கு இணைத்துப் பார்க்க வேண்டும். இன்று இலங்கையில் பரவலடையக்கூடியதும், தழுவிக்கொள்ளக்கூடிய மதமாகவும் இஸ்லாமுள்ளது. எனவே பிக்குகளுக்கு இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பிக்குகளின் கடந்தகால அரசியல் பிரக்ஞையையும் மனஉணர்வுகளையும் நோக்குமிடத்து இந்த உண்மை புலப்படுகிறது.

பொதுவாக கிராமப்புறங்களிலுள்ள வறிய குடும்பங்கiளைச்சேர்ந்த சிறுவர்களே பிக்குகளாக வருவதற்கு பிரிவெனாக்களில் இணைக்கப்படுகின்றனர். பிக்குகள் இத்தகையதொரு பின்னணியைக்கொண்டிருப்பதால் கிராமப்புற மக்களின் மரபுசார்ந்த மனப்பாங்குகளையே அவர்கள் பெரிதும் வெளிப்படுத்துகின்றனர். பன்மைத்துவ சிந்தனை,புதியவிடயங்களை கிரகித்தலும், அங்கீகரித்தலும், சகிப்புத்தன்மை போன்ற பண்புகள் அவர்களிடம் குறைவாகவே காணப்படுகின்றன. இதனால் இலகுவாக இனவாத, குறுகிய இனத்தேசியவாத சிந்தனைகளுக்கு ஆட்படுகின்றனர்.

பௌத்த பிக்குகள் குறித்த சமூகவியல் ஆய்வுகள் ஓரளவு சிங்கள சமூகத்தளத்தில் நிகழ்ந்துள்ளன. ஜனனாத் ஒபேசேகர போன்ற புகழ்பெற்ற சமூகவியலறிஞர்கள் இது தொடர்பில் பங்களித்துள்ளனர்.எனினும் பிக்குகள் பற்றிய உளவியல் ஆய்வுகள் மிகக் குறைந்தளவிலும் மேற்கொள்ளப்படவில்லை என்றே கருதுகிறேன்.பிக்குகளின் காழ்ப்புணர்வு மனப்பான்மையும், மரபுவாத மனப்பான்மையுமே பிக்குகளின் சிறுபான்மை விரோத நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக இருக்கக்கூடும். ஆனால் வேடிக்கை என்னவென்றால்,அரசியல் பிக்குகள் பௌத்தத்தின் அடிப்படை அறங்களில் கூட பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. அவர்களளவில் பௌத்தம் வாழ்க்கை நெறியாகவன்றி அரசியலாக மட்டுமே உள்ளது. இதனை புத்தரின் தவறாகவன்றி பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்தும் பிக்குகளின் தவறாகவே புரிந்த கொள்ளப்பட வேண்டும். இது போன்ற விடயங்களை ஜனனாத் ஒபேசேகர பரந்த விவாதங்களுக்கு உட்படுத்தினார்.

பௌத்ததின் அடிப்படை அறங்களிலிருந்தும் அரசியல் பிக்குகளில் பலர் விலகியேயுள்ளனர். புத்தர் மிகமுக்கியமாக தடுத்துள்ள ஐந்து தீமைகளில் ஒன்றையோ அல்லது பலதையோ பிக்குகள் செய்து வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன.

சிறு கிராமப்புறங்களிலுள்ள விகாரைகளில் கடமையாற்றும் பிக்குகள் மது அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது மிகமிகக் குறைவாக இருக்கின்போதிலும் பிக்குகளிடம் மதுப்பாவனை இருப்பதைத்தான் நாம் இங்கு சுட்டிக்காட்டுகிறோம். அதேபோன்று மாமிசம் உண்ணல்,தனக்கு வரும் ஆடைகளை விற்றல்,மனித உயிர்களை பலியிடும் யுத்தத்துக்கு பூரண ஆதரவு வழங்கியமை போன்ற நடவடிக்கைகள் மூலம் பிக்குகள் பௌத்தத்தின் அடிப்படை அறங்களுக்கு துரோகமிழைத்து வருகின்றனர். கள்ளநோட்டு வைத்திருந்ததாக ஒரு பிக்கு கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுதிக்கப்பட்ட சம்பவம் மிக அண்மையில் நமது நாட்டில் நடைபெற்றதாகும். இந்நிலையில் பௌத்தத்தைப் பாதுகாக்கவும் ஏனைய தேசங்களைப் புறக்கணிக்கவும் அரசியல் பிக்குகளுக்கு என்ன தகுதி இருக்கிறது என கேட்கத்தோன்றுகிறது.

அரசியல் பிக்குகளின் இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக சிறுபான்மையினங்கள் மத்தியில் அவர்கள் குறித்து நல்லபிப்ராயம் பொதுவாக நிலவுவதில்லை. முஸ்லிம் சிறுவர்கள் மத்தியில் பிக்குகளின் பௌதீகத் தோற்றம் பற்றி சுவாரஸ்யமான கதைகள் நிலவுகின்றன.பெரும்பாலும் அக்கதைகள் அவர்களை கேலி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளன. வன்முறைக்கு எதிரானதும் அஹிம்சையைப் போதிப்பதுமான ஒரு மதத்தின் போதகர்களால் சிறுபான்மை சமூகங்களின் உளவியலை வென்றெடுக்க முடியாமல் போயிருப்பது மிகுந்த வேதைனக்குரியதாகும்.

இவர்களது இக்குறுகிய சமூக உளவியல் அடிப்படையிலான உலகநோக்கே அவர்கள் மீதான அதிருப்திக்கு முதன்மைக் காரணமாகும். இந்த உளவியல் நிலையிலிருந்தே பிக்குகள் விசயங்களை அணுகுகின்றனர். குறிப்பாக தனக்கு உவப்பளிக்காத விடயங்களென்றால் இவர்களது இக்குறுகிய உளவியல் அணுகுமுறை மேலும் குறுகலடைகிறது. எனினும் அரசியலுக்கு அப்பால் சில பௌத்த பிக்குகள் இலங்கையில் மட்டுமன்றி உலகளாவியரீதியிலும் பல்வேறு மனித நேயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் பிக்குகள் அரசியல் நீக்கம் செய்யப்படுவதன் மூலம் மட்டுமே இக்குறுகிய மனப்பாங்குகளிலிருந்து விடுபட்டுச் செயற்பட முடியும். அத்தகைய நிலைமை உருவாகும்போதே இலங்கை வெற்றிகரமான ஓர் தேசமாகத் திகழும்.

அரசாங்கத்தின் கிழக்குக்கான புதிய திட்டங்கள்

கிழக்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னர் அதற்கான புதிய திட்டங்கள் அரசாங்கத்தினால் வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன. அரசியல் பௌத்தத்தின் சமகால முன்னெடுப்புகளின் களமாக கிழக்கு மாற்றியமைக்;கப்பட்;டுள்ளதை அரசாங்கத்தின் கிழக்குக்கான இப் புதிய திட்டங்கள் காட்டுகின்றன. கிழக்கில் அம்பாறையும் திருகோணமலை மாவட்டமும் சிங்களமயப்படுத்தலின் முக்கிய களமாக மாற்றப்பட்டுள்ளன. இங்கு அரங்கேற்றப்படும் சில நிகழ்வுகள் நன்கு திட்டமிடப்பட்டவை போன்றே தென்படுகின்றன. இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கிழக்கை சிங்களமயப்படுத்தலுக்கான பணியை ஏலவே ஆரம்பித்துவிட்டாலும் புத்தர்சிலை விவகாரத்துடன்தான் இது வெகுசன அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அம்பாறையைப் பொருத்தவரை பொத்துவில் பிரதேசமே தற்போது அரசியல் பௌத்தத்தின் கவனயீர்ப்புக்குள்ளாகியுள்ளது. இதற்குப் பிரதான காரணமாக இருப்பது பொத்துவிலிலுள்ள உல்லே மற்றும் அருகம்பே போன்ற இடங்கள் உல்லாசப்பயணிகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய இடமாக இருப்பதால்; வருமானம் ஈட்டித்தரக்கூடிய முக்கிய பொருளாதரப்பிரதேசமாக இவை விளங்குவதாகும். இவை முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களாகவும் விளங்குகின்றன. இம் மண் மூலம் கிடைக்கும் பெருமையையும் இலாபங்களையும் பெற்றுக்கொள்ள அரசு முனைவதை அங்கு அரங்கேறும் சில நிகழ்வுகள் காட்டுகின்றன. அருகம்பேயை அண்டிய கடற்கரைப்பகுதியில் விஷேட அதிரடிப்படையினரின் முகாமொன்று நிறுவப்பட்டு அதற்கு முன்னால் புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டுள்ளது. உல்லேயிலும் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் பலத்த பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வகையான நடவடிக்கைகள் உள்ளுர் முஸ்லிம்களுக்கு தெரியப்படுத்தவது அவர்களுடைய பகுதிக்குள் பௌத்தத்தை பரவலடையச் செய்வதில் எப்படியாவது ஆயுதப்படைகளை ஈடுபடுத்தவததான்.

அருகம்பேயில், அருகம்பே வள அபிவிருத்;தித்திட்டம் என்றொரு வர்த்தகத்திட்டத்தினையும் அரசாங்கம் முன்னெடுக்கப் போவதாக சர்வதேச அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பூர்வாங்க வேலைத்திட்டங்களுக்காக 2005 ஏப்ரலில் அரச வர்;த்தக குழுவொன்று இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்து இம்மண்ணின் மக்களோடு எதுவிதக் கலந்துரையாடல்களுமின்றி அங்கு மேற்சந்தையொன்றை அமைப்பதற்கு சிபாரிசு செய்துள்ளதுடன் அந்நிலப் பகுதியை சுற்றலாத்துறையின் அதிகாரத்தின் கீழும் கொண்டுவந்துள்ளது. இது சிங்களமயமாக்கலின் மண் இழப்பு சார்ந்த பரிமாணமாகும். தொடர்ந்தேர்ச்சியாக அந்த மண்ணுடன் பிணைக்கப்பட்டிருந்த ஒரு மக்கள் குழுமம் திரட்சியாக மண்; இழப்புக்குள்ளாகும் கட்டத்தையடைந்துள்ளது.

முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டமான அம்பாறையின் நிர்வாகத்துறையும் சிங்களமயமாக்;கலி;ன் நேரடியான செல்வாக்குக்குட்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக ஒரு சிங்களவர் உள்ளார். அவரது அலுவலகமும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறையிலமைந்;துள்ளது. முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டத்தின் மிக முக்கிய பொறுப்பான நிர்வாகப் பொறுப்பில் சிங்களவரொருவர் அமர்த்தப்பட்டிருப்பது, வேறு சிங்களப் பிரதேசங்களை அம்பாறை மாவட்டத்துடன் இணைப்பது உள்ளிட்ட சிங்கள குடித்தொகை எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகள்;, தீகவாபியை புனிதப் பிரதேசமாகப் பிரகடணப்படுத்தி தனியான சிங்களப் பிரதேச செயலகமாக தீகவாபியை மாற்றும் செயல் திட்டங்கள் போன்றன அம்பாறையை மேலும் சிங்களமயப்படுத்தலுக்கான அரசாங்கத்தின் புதிய திட்டங்களாக உள்ளன.

திருகோணமலை மாவட்டத்திலும் அரசு வெவ்வேறு வியாக்கியானங்களுடன் சிங்களமயமாக்கல் திட்டத்தை முன்னெடுக்கிறது. அண்மையில் அரசினால் அறிவிக்கப்பட்ட விஷேட பொருளாதார வலயம் (Special Economic Zone-SEZ) துறைமுகத்தைச் சூழவுள்ள சுமார் 600 ஏக்கர் நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படப் போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. மூதூர் போன்ற முஸ்லிம் நிலங்களும் இத்திட்டத்தினால் இழக்கப்படும் நிலையுள்ளது.

கிழக்கு மாகாண அரசாங்கக் கட்டமைப்பையும் பல்லின அரசாங்க முறைமையாக அரசாங்கம் வடிவமைத்திருப்பதையும் குறித்த சர்வதேச அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தமிழ்,முஸ்லிம்,சிங்களப் பிரதிநிதிகளைக் கொண்டதாக கிழக்கு மாகாண அரசாங்கம் தற்போது தொழிற்படுகிறது. கிழக்கில் கிழக்கு மாகாண அரசாங்கக் கட்டமைப்பு மூவினங்களினதும் கலவையாகவேயுள்ளது.

உள்ளுராட்சி அதிகாரசபைகள் திருத்தச்சட்ட மூலமும் கிழக்கை சிங்களமயப்படுத்தும் அரசாங்கத்தின் மிக அண்மைய முன்னெடுப்பாக உள்ளது. சிறுபான்மை இனங்களுக்குச் சமனான பிரதிநிதித்துவத்தையோ அல்லது அதிகாரத்தையோ அடைவதற்கான முயற்சியாகவே இது உள்ளது. அரசாங்கத்தின் இத் திருத்தச் சட்டமூலம் உள்ளுராட்சி சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் முறையிலும் உள்ளுராட்சி சபைகளின் அதிகார எல்லையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. தற்போது உள்ளுராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகள் விகிதாசாரத் தேர்தல் முறையின் மூலமே தெரிவு செய்யப்படும் போது கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையிலேயே பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. கிழக்கில் சிறுபான்மை இனங்களே பெரும்பான்மையாக விளங்குவதால் அவர்களின் வாக்குவிகிதாசாரமே அதிகமாக காணப்படும்.

இதனால் உள்ளுராட்சி சபைகளில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையே அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளது. எனவே தான் அரசாங்கம் இப் புதிய திருத்தச் சட்டமூலம் கிழக்கை சிங்கள மயப்படுத்தும் தனது உபாயத்தின் ஒரு பகுதியாக இதனைக் கொண்டு வந்துள்ளது. இத்திருத்தச் சட்டமூலம் உள்ளுராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் போது, தொகுதி ரீதியான முறையின் படி 70 % பிரதிநிதிகளும் விகிதாசார முறையின் கீழ் 30% பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட வேண்டும் எனக்கூறுகிறது. இம் முறையின் கீழ் சிறுபான்மை இனப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடையக் கூடிய நிலையேயுள்ளது. எனினும் இத்திட்டத்தை வடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றத்தடை காணப்படுவதாலும் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரம் கிடைக்காமையாலும் இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. சிலவேளை இது ஒரு ஒத்திவைப்பு நடவடிக்கையாகக் கூட இருக்கலாம்.

அரசாங்கத்தின் கிழக்குக்கான இப்புதிய திட்டங்கள் கிழக்கை சிங்களமயப்படுத்தும் அரசாங்கத்தி;ன் நோக்கங்களை வெளிப்படையாக்கியுள்து. சிங்கள பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதும் பல்லினத் தேசங்களைக் கொண்டதுமான இலங்கையில் முன்னெடுக்கப்படும் இச் செயல்திட்டத்தை சிங்களமயப்படுத்தல் என மதிப்பிடுவது பொருத்தமானதா? பெரும்பான்மையாக சிங்களவர்கள் வாழுமிடங்களில் சிறுபான்மை இனத்தேசங்கள் ஓரளவு தங்களது அரசியல் கலாசார உரிமைகளோடு வாழும்போது சிறுபான்மை இனத்தேசங்கள் பெரும்பான்மையாக வாழுமிடங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்க மறுப்பது நியாயமானதா? இது ஜனநாயகக் கருத்தியலுக்கு முரணாக அமையாதா? போன்றன கிழக்கை சிங்களமயப்படுத்தும் அரசின் திட்டங்களுக்குப் பின்னால் மேற்கிளம்பும் முக்கிய கேள்விகளாகும்.

மேலோட்டமான பார்வையில் சிங்களமயப்படுத்தலின் தர்க்க நியாயங்களாக வெளிப்படும் இக்கேள்விகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகவுள்ளன. இது குறித்து ஆழமான பார்வையும் புரிதலும் நமக்குத் தேவை. கிழக்கை சிங்களமயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்குப் பின்னால் அபாயகரமான மறைமுக நிகழ்ச்சி நிரலொன்றுள்ளது என்ற உண்மை புரிந்து கொள்ளப்படவேண்டும்.

பொதுவாக இன்று இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளில் சிறுபான்மைத் தேசங்கள் தங்களது உரிமைகள் மறுக்கப்படும்போது, ஆயுதப் போராட்டங்கள் நம்பிக்கையளிக்காதபோது அல்லது வெற்றியளிக்காத போது அரசியல் ரீதியான போரட்டங்களையே மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த வகையில் முஸ்லிம்கள் அரசியல் போராட்ட வழிமுறையையே தங்களது வரலாற்று நெடுகிலும் பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரு குறித்த புவியியல் பிரதேசத்தில் கூட்டாக வாழும் ஓர் மக்கள் குழுமத்தாலேயே ஒருங்கிணைந்த பலமான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். வட-கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக இருந்ததனாலேயே இவ்விரு சிறுபான்மை இனத் தேசங்களாலும் வௌ;வேறு வகையான வலுவான போராட்டத்தை முன்னெடுக்க முடிந்தது. வட-கிழக்கு முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்ற வலுவான ஓர் அரசியல் இயக்கத்தை தொடக்கி வெற்றிகரமாக இயங்க முடிந்தது. ஆனால் சிறுபான்மைத் தேசங்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதன் மூலம் அவர்களின் அரசியல் பலம் சிதைவடையக்கூடிய வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாறையை சிங்களமயப்டுத்துவதன் மூலம் அங்கு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை குறைக்கலாம். அதாவது சிங்கள வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைந்து சிங்களப் பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே பலமான அரசியல் இயக்கமொன்றை முஸ்லிம்கள் முன்னெடுப்பது சாத்தியமற்றதாகலாம். எனவே சிறுபான்மை அரசியல் கட்சிகளை வலுவிழக்கச் செய்வதோடு பெரும்பான்மை கட்சிகளுக்குள் அவற்றை அரைத்துக் கரைக்கவும் முடியும். அத்தோடு பெரும்பான்மைக் கட்சிகளுக்கான நிலையானதொரு வாக்கு பலத்தையும் கிழக்கில் பெறுவதன் மூலம் சிறுபான்மைக் கட்சிகளின் பேரம்பேசும் தகுதியையும்; இழக்கச் செய்ய முடியும்.

சிறுபான்மை இனமொன்று குறித்த நிலப்பகுதியில் பெரும்பான்மையாக வாழும்போதே அவ்வினச் சிறுபான்மையினால்; தாயகக் கோட்பாடு, சுய நிர்ணய உரிமை, தனியலகு, தனி நாடு போன்ற கோரிக்கைகளை முன்வைக்க முடியும். இத்தகைய உரிமைகளுக்கு ஒர் சிறுபான்மை இனம் உட்படவேண்டுமாயின் சனத் தொகை அடிப்படையிலும் பிரதேச அடிப்படையிலுமான அளவு முக்கியமானதாகும். ஆனால் கிழக்கை சிங்களமயப்படுத்துவதன் மூலம் சிறுபான்மையினங்களின் எண்ணிக்கை குறைவடைவதோடு அங்கு ஒரு பல்லினச் சமூகக் கட்டமைப்பே உருவாகும். இந்நிலையில் குறித்த ஓரினம் மட்டும் இக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாது போகும். இதனால் இலங்கையைத் தொடர்ந்தும் ‘மே புதுன்கே தேசய’வாகவே வைத்திருக்க முடியும். தென்னிலங்கை முஸ்லிம்கள் இன்று எதிர்கொள்ளும் அனைத்தவிதமான அரசியல் பொருளாதார சமூகவியல் நெருக்கடிகளையும் கிழக்க முஸ்லிம்களும் எதிர் கொள்ளப்போகும் அபாயத்தையே இது கொண்டுள்ளதாக கிழக்கு முஸ்லிம்கள் இன்று அச்சம் கொண்டுள்ளனர்.

தென்னிலங்கை முஸ்லிம்கள் சிதறிய குடிசனப்பரம்பலைக் கொண்டிருப்பதனாலேயே ஒரு நிலையான தனித்துவ மிக்க அரசியல் தலைமைத்துவத்தை அவர்களால் உருவாக்க முடியவில்லை. கிழக்கிலும் ஒரு கலவையான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அரசாங்கம் அடைய விரும்புவது ஒருசிதறிய குடிசனப் பரம்பலைக் கொண்ட சமூகத்தையே. சிதறிய குடிசனப் பரம்பலைக் கொண்ட சமூக அமைப்பொன்றில் பலமான அரசியல் இயக்கங்களோ, இன்னபிற போராட்ட இயக்கங்களோ எதுவும் தலை தூக்க முடியாது என்பதே உலக வரலாற்றனுபவமாகவுள்ளது.

சிங்களமயமாக்கல் மூலம் கிழக்கில் ஒரு பாரிய கலாசார முரண்பாட்டுக்கும் கிழக்கு முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும். இது ஒரு நீண்ட காலத்தின் பின்னரான முரண்பாடாகவிருந்தாலும் கட்டாயம் கலந்துரையாடப்படவேண்டிய பிரச்சினையாகும். சிங்கள சமூகத்தின் திறந்த பண்பாட்டு நடத்தைகள் கிழக்கு மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஒவ்வாதவையாகும். சிங்கள இளைஞர்-யுவதிகளின் ஆடைக்கலாசாரம் மற்றும் ஆண்-பெண் உறவுகள் போன்றவையும் கிழக்கு முஸ்லிம் இளைஞர்களையும் இலகுவில் தொற்றிக் கொள்ளும். இதன் மூலம் முஸ்லிம்கள் பின்பற்றும் இஸ்லாமிய சமூக ஒழுங்குகளும் கலாசார அம்சங்களும் பெரும் சவாலுக்குள்ளாகக்கூடிய நிலை உருவாகும். இந்த நியாயமான அச்சமும் இன்று கிழக்கு முஸ்லிம்களை ஆட்கொண்டுள்ளது. இந்த சந்தேகங்களிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் மக்கள் முழுமையாக விடுபடுவதற்கான திட்டங்களே இன்று கிழக்கிற்கு தேவையாகவுள்ளன.

குறிப்பாக இலங்கையின் தேசிய இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் உரையாடலையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கான செயற் திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். சுமூகங்களுக்கிடையில் மீளிணக்கத்தை (Reconciliation) ஏற்படுத்துவதற்காக அரசாங்கமும் சமூக சக்திகளும் முன்னின்று உழைக்கவேண்டிய தருணமும் இதுவே. இதுவே கிழக்குக்கும் வடக்குக்குமான அரசாங்கத்தின் முதன்மையான பணியாக முன் தள்ளப்படவேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக கிழக்கில் அத்தகைய திட்டங்கள் எதுவும் அரசினால் முன்னெடுக்கப்படாமை வருந்தத்தக்கதே. இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையையும் சந்தேகங்களையும் மேலும் தீவிரமடையச் செய்யும் நடவடிக்கைகளை திட்டங்களை அரசாங்கம் மேலும் முன்னெடுக்காதபோதே உறுதியானதும் ஐக்கியமானதுமான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே தமிழ் முஸ்லிம் மக்களின் நிலைப்பாடாகும்.

இனி இங்கு சிறுபான்மை அரசியல்: சட்டியிலிருந்து அடுப்புக்கு..

இலங்கையில் தற்போது சிறுபான்மை அரசியலின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகளும் அச்சங்களும் எழுந்துள்ளன. புலிகளுக்குப் பின்னரான இலங்கையில் இடம் பெற்ற இரு தேர்தல்களிலும் ஐ.ம.சு.கூட்டமைப்பே பாரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது. இத்தேர்தல்களின் வெற்றிக்கு முன்னரே சிறுபான்மை அரசியலை மதிப்பிறக்கம் செய்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன என்பதை தேசிய அரசியலை உன்னிப்பாக அவதானிக்கும் எவரும் புரிந்து கொள்வர்.

தற்போது சிறுபான்மை அரசியலின் எதிர்காலம் சவாலுக்குள்ளாகி இருக்கும் நிலைமையை சரிவரப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பொதுத் தேர்தலில் அரசுக்குக்கிடைத்த பெரும்பான்மை பலம்,போரில் வெற்றி பெற்ற வீர மனோநிலை, சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் முனைப்பு (அல்லது நடிப்பு) என்பவை அரசாங்கத்தின் பண்பாக வெளிப்படும் இன்றைய சூழலில் சிறுபான்மை அரசியலின் எதிர்காலம் உண்மையிலேயே சவால் நிறைந்ததாகவே மாறியுள்ளது. புலிகளுக்குப் பின்னரான இலங்கையில் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் சில கருத்துகளும் நடவடிக்கைகளும் இந்த அச்சத்தை சிறுபான்மையினர் மத்தியில் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த வகையில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த ஓர் முக்கிய கருத்து பிரபாகரனின் மறைவையடுத்து பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது. ‘இனி நாட்டில் சிறுபான்மை என்றொரு இனமில்லை’ என்று அவர் அறிவித்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் சிறுபான்மைத் தேசங்கள் நிதானமாக அணுக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் இனரீதியான புறக்கணிப்புகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு வந்த நாடொன்றின் தலைவர் முக்கியமான தருணத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டதன் நோக்கம் நிதானமான புரிதலையே வேண்டி நிற்கிறது.

தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் புலிகளின் விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து புலிகள் மூலமே தமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையிலிருந்த போது அவர்களுக்கு புலிகளின் முடிவு பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கக்கூடும். அதேநேரம் அவர்களை ஒழித்துக் கட்டிய அரசாங்கத்தின் மீதும் பெரும் அதிருப்தியும், வெறுப்பும் ஏற்பட்டிருக்கவும்கூடும்;. தவிர ஒரு வகையான அச்சத்துக்கும் அவர்கள் ஆளாகி இருக்கவும்கூடும். இந்த இடத்தில் தமிழ் மக்களின் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்கும் அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்களை மீட்டு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும், இன்னுமொரு வார்த்தையில் சொல்வதானால் தமிழ் மக்களுக்கு ஓர் ஆறுதலை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டி அரசாங்கத்தினால் உடனடியாக மேற்கொள்ளகூடியதான ஆறுதல் நடவடிக்கையாக அந்த அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருக்கலாம். இந்த அறிவிப்பு மூலம் இனி சிறுபான்மை இனங்கள் எந்தவிதப் புறக்கணிப்புகளுமின்றி சமூக சமத்துவத்துடன் தாங்கள் நடத்தப்படப்போகிறோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு பிரிவினை எண்ணங்களைக் கைவிட்டு தேசிய ஒற்றுமையை நோக்கித் திரும்பக்கூடும் என்ற அடிப்படையிலும் அது சொல்லப்பட்டிருக்கலாம். (முக்கியமான தலைவரினால் அந்தக் கருத்து வெளிப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக).

இந்த அறிவிப்பை இன்னொரு அர்த்தத்தில்; புரிவதானால், சிறுபான்மை இனங்களின் கலாசாரம், அரசியல் கோரிக்கைள், சுயநிர்ணய உரிமை, ஏனைய சிறுபான்மை அடையாளங்கள் அனைத்தையும் ஒரு பெரும்பான்மை அரசியல் கலாசாரத்துக்குள்; அரைத்துக் கரைக்கும் உள்நோக்கம் கொண்ட ஒரு பேச்சாகவும் அது இருக்கலாம். இதன் மூலம் சிறுபான்மையினரின் வித்தியாசமான அடையாளங்கள் புறக்கணிக்கப்பட்டு பெரும்பான்மை அடையாளத்துக்குள், பெரும்பான்மையின அரசியல் நீரோட்டத்துக்குள் அவர்களைத் திட்டமிட்டவகையில் கொண்டு வருவதே நாடப்பட்டிருக்கலாம். ஏனெனில் சிறுபான்மை என்றொரு இனம் மட்டுமே இல்லாமல் போகும் என அவர் குறிப்பிட்டார். பெரும்பான்மை இனம் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. பெரும்பான்மை என்ற மமதையும் அதன் வழியாக வரும் அதிகாரமும் இந்தக் கருத்துக்குள் மறைந்திருப்பதாகவும் இதனை நோக்கலாம்.

உண்மையில்; பெரும்பான்மை என்ற இனத்தின் அரசியல் சமூக அடையாளங்களுக்குள் சிறுபான்மைத் தேசங்களையும் கொண்டு வருவதே இக் கூற்றின் உண்மையான நோக்கமாக உள்ளது என்ற புரிதலுக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே இன்று அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் அமைந்துள்ளன. அதாவது சிறுபான்மை என்றொரு இனமில்லை என்பதன் மூலம் உணர்த்தப்படுவது சிறுபான்மையினருக்கு ஒரு அபாயகரமான இலங்கைதான் என்ற கருத்தையே இன்று சிறுபான்மைத் தேசங்கள் வெளிப்படுத்துகின்றன. இன்று அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் இத்தகையதொரு செய்தியையே சிறுபான்மையினருக்குச் சொல்கிறது.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அரசுக்குக் கிடைத்திருக்கும் பெரும்பான்மை பலம் (இன்னும் 2:3 பெரும்பான்மைக்கு 6 ஆசனங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றன) இன்று இங்கு பல்வேறு அரசியல் மாற்றங்களை சாத்தியமாக்கியுள்ளது. இந்த வகையில் யாப்புமாற்றமொன்றுக்கான வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் தொடங்கியுள்ளது. 1972,1978 ஆண்டுகளில் அரசாங்கத்துக்கிடைத்த பெரும்பான்மை மூலம் புதிய யாப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சிறுபான்மையினரின் நலன்களும் கோரிக்கைகளும் போதியளவு கவனத்திற்குட்படாத வகையிலேயே அந்த யாப்புகள் அரங்கேற்றப்பட்டன. தற்போதைய யாப்பு மாற்றமும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இல்லை. ஜனாதிபதியின் அறிவிப்பும் அதைத் தொடர்ந்த சில நடவடிக்கைகளும் மாற்றங்கள் என கூறப்பட்ட உள்ளுராட்சித் தேர்தல் முறை மாற்றம், பிரதான தேர்தல் மாற்றம், செனட்சபை, 17ம் திருத்தச் சட்டத்தின் மீதான திருத்தம் போன்ற சில உத்தேச விடயங்களையும் பார்க்கும்போது யாப்புத்திருத்தமென்பது சிறுபான்மை நலன்களும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உள்வாங்கியதாக அமையாது என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.

குறிப்பாக யாப்பு மாற்றத்துடன் ஒட்டியதாக இன்று பேசப்படும் தேர்தல் முறை மாற்றமும் சிறுபான்மை நலன்களை கவனத்திற்கொள்ளப்போவதில்லை என்பது புலனாகிறது. அதாவது நடைமுறையிலுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மாற்றப்பட்டு தொகுதிவாரித் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படப்போவதாக கூறப்படுகிறது. இத் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவத்தின் கடந்தகால வரலாறு சிறுபான்மையோருக்கு கசப்பான அனுபவங்களையே தந்துள்ளன. இத்தொகுதிவாரித் தேர்தல்முறை அமுலிலிருந்த காலப்பகுதியில் சட்டசபையில் சிறுபான்மையோரின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்திருந்தமை நாம் இங்கு ஊன்றிக் கவனிக்கத்தக்க விடயமாகும். இத்தேர்தல் முறையின் கீழ் 1931 மற்றும் 1936 ஆண்டுகளில் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் சட்டசபையில் சிறுபான்மைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்திருந்ததை அவ்வவ் கால தேர்தல் முடிவுகளிலிருந்து அறிய முடிகிறது. எனினும் அரசசார்பான சிறுபான்மை புத்திஜீவிகளும் இன்று தொகுதிவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அவை அரசசார்பானவர்களின் கருத்துக்கள் என்பதற்காக அல்ல உண்மையிலேயே அவை பலவீனமான கருத்துகளாகவுள்ளன. அதனால் அவை மீள்பரிசீலனைக்குரியனவாகும். தொகுதிவாரிப் பிரதிநிதித்துவமானது சார்பளவில் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளதை நாம் சிறுபான்மையினர் நிலை நின்று ஏற்றாக வேண்டும்.

அண்மையில் பிராந்தியக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ‘இனி எதிர்க்கட்சிகளே இல்லை’ என்றொரு அறிவிப்பையும் வெளியிட்டார். இந்த அறிவிப்பும் இலங்கையின் பன்மைத்துவ அரசியல் கலாசாரத்தை கேள்விக்குள்ளாக்குவதோடு சிறுபான்மை அரசியலின் எதிர்காலத்துக்கும் பலத்த அடியாகவும் அமைந்திருப்பதாகவே சிறுபான்மையினர் கருதுகின்றனர். ‘இனி இலங்கையில் சிறுபான்மையினர் என்றொரு இனமில்லை’ என்ற ஜனாதிபதியின் கூற்றின் எதிரொலியாகவா இதை நோக்குவது? என்ற கேள்விகள் இப்போது சிறுபான்மைத் தரப்புகளிலிருந்து எழுப்பப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் இல்லை என்பதன் உண்மையான அர்த்தம் கட்சி இணக்கப்பாடன்றி கட்சிகளை அழித்தொழிக்கும் அல்லது பலமிழக்கச்செய்யும் நடவடிக்கையே என்ற கருத்தையே இன்றைய அரசியல் நிகழ்வுகள் வெளிப்படுத்தி நிற்பதைக் காணலாம். கடந்த பொதுத்தேர்தலில் அரசாங்கத்துக்குக் கிடைத்த அமோக வெற்றி இன்னொரு புறம் JVP என்ற அரசியல் கட்சி அடைந்திருக்கும் படு தோல்வி (கிட்டத்தட்ட அந்தக் கட்சி முற்றாக அழிந்துவிட்டது போன்ற தோற்றப்பாடு), ஐ.தே.கட்சியின் (உட்கட்சிப்பூசல் உள்ளிட்ட) பின்னடைவு போன்றவை இலங்கையில் எதிர்க் கட்சிகளின் எதிர்காலத்தை ஒரு மோசமான நிலைக்கே எடுத்துச் சென்றுள்ளன.

அதே நேரம் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் எதிர்கால இருப்புக்கும் பாரிய அச்சுறுத்தலான சூழல் இன்று தோற்றுவிக்கப்பட்டு வருவதையும் காணலாம். அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் இத்தகையதொரு நெருக்கடி நிலமையை சிறுபான்மை கட்சிகள் எதிர்கொள்ளவுள்ளன. அரசினால் அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய மசோதா இதற்கான சமிக்ஞைகளை காட்டுவது போலுள்ளது. 1981 ம் ஆண்டின் பாராளுமன்ற 1 ம் இலக்க உறுப்புரையை திருத்துவதற்கான புதிய மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ~ரத்துகள் இந்த முயற்சிக்கான முதற்கட்டமாகவுள்ன. இம்மசோதவின் ஒரு அம்சம் இப்படிக் குறிப்பிடுகிறது “அரசியல் கட்சி ஒன்றின் பெயர் எந்தவொரு மதத்தையோ அல்லது சமூகத்தையோ குறிக்குமென்றால் அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு உரித்துடையதல்ல’

சிறுபான்மைக் கட்சிகள் பெரும்பாலும் தமது இன,மத,பிராந்திய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலேயே பெயரைக் கொண்டுள்ளன. இத்தகைய அடையாளங்கள் மூலம் அக்கட்சிகள் தமது சமூகத்துக்குள் ஆதரவினைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினைப் பெறுகின்றன. இந்த அடையாளங்கள் மறுக்கப்படுவதன் மூலம் சிறுபான்மைக் கட்சிகள் தமது ஆதரவுத் தளத்தினை பெருமளவு இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலைமையைத் தோற்றுவிப்பதன் மூலம் சிறுபான்மையினரின் தனியான அரசியல் பாதை சவால்கள் நிறைந்ததாகவே மாறும். எனவே அரசியல் அர்த்தத்தில் இங்கு சிறுபான்மை என்றொரு இனம் இல்லாமல் போகலாம்.

ஆக ஒட்டுமொத்தத்தில் நோக்கும்போது இலங்கையில் சிறுபான்மை என்றொரு இனமில்லை என்ற கருத்து சிறுபான்மையினரின் அரசியல், சமூகவியல் நலன்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட கருத்தாகவே இன்று எஞ்சியுள்ளது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

நிறைவாக …

அரசியல் பௌத்தத்தின் முன்னெடுப்புகளுக்கும் அது பயணப்படும் பாதைக்குமான மிகச் சுருக்கமான வரைபடமே இது. விடுதலைப் புலிகளின் வரலாறு முடிவுக்குக்; கொண்டுவரப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் அரசியல் பௌத்தத்தின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி அமையும் என்பது ஓர் அபாயகரமான கேள்வியாக எங்கள் முன்னுள்ளது. முன்னைய காலங்களைப் போன்று இனி எந்தவொரு அரசும் அதன் கீழுள்ள மக்களை மிக மோசமாக ஒடுக்க முடியாத அளவுக்கே இன்றைய சர்வதேச உறவுகளும் நிலைப்பாடுகளும் உள்ளன. எனினும் சர்வதேச சமூகம் பௌதீக ரீதியான மனித உரிமை மீறல்களில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடிய நிலை உள்ளது. ஆனால் அரசினால் மறைமுகமாக கருத்தியல் தளத்தில் முன்னெடுக்கப்படும் மனித உரிமை மீறல்களை அதனால் கண்டுகொள்ள முடிவதில்லை. மனித உரிமைகள் மிகவும் அக்கறைக்குள்ளாகியிருக்கும் இன்றைய சூழலிலும் கூட சிறுபான்மையினர் அதிகம் அச்சம் கொள்ளத்தக்க வகையிலேயே நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. எனவே மனித உரிமை அமைப்புகள் இது விடயத்தில் அதிகம் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டியுள்ளது.

அரசாங்கம் எதுவித உள்நோக்கங்களுமின்றி அந்தந்த மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் அவர்களின் சமூக உரிமைகளிலும் அபத்தங்களை ஏற்படுத்தாத வகையில் தமது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் போதே மக்களினால் அவை வரவேற்கப்படும்.

Advertisements

Leave a comment

Filed under Uncategorized

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s