போரும் வாழ்வும்

போரின் கோட்டோவியமும் நினைவுக்குறிப்பும்
-ஜிஃப்ரி ஹாஸன்-

எனது கடந்த காலத்தை ஞாபகிப்பதை எப்போதும் தவிர்ப்பதையே விரும்பி வந்திருக்கிறேன். ஏனெனில், எனது கடந்த காலம் ஒரு போதும் அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருந்ததில்லை. என் காலத்தை பின்னோக்கி நகர்த்துகையில் என் நினைவு வெளியில் நீளும் கடந்த காலத்தின் பிம்பங்கள் மிகவும் மோசமானவை. வரலாற்றின் ஏதோவொரு இடுக்கில் நசியுண்டபடி அபத்தங்களிலிருந்தும் மரணத்திலிருந்தும் தப்பிப்பிழைத்த பொழுதுகளே அதிகம். எனக்கு நினைவு தெரிந்த நாள்முதலே நாட்டின் அரசியல் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்ததில்லை. அது தனது முகத்தை போர்முக – அரசியலாக வெளிப்படுத்தியதிலிருந்து வாழ்வு பெரிதும் துயர் மிக்கதாகவே இருந்து வருகிறது. நம்பிக்கையற்ற பொழுதுகள் -கனவுகளற்ற மனிதர்கள்- வெறிச்சோடிய தெருக்கள் - ஒரு மூட்டைப் பயத்துடன்கூடிய அலைச்சல்கள்- இடப்பெயர்வுகள் - தூக்கமற்ற இரவுகள் - உயிரழிவுகள் - உடைமை இழப்புகள்- சொல்லொணாத்துயரங்கள் என வாழ்வின் எல்லாப் பரிமாணங்களிலும் போர் தன் நிறத்தைப் பூசிக்கொண்டிருந்தது.

இலங்கை அரசுக்கும் - புலிகளுக்குமிடையில் போர் மூண்டதையடுத்து எங்கள் கிராமமும் போரில் அழிவுற்ற அனேக கிராமங்களைப் போல் - கிட்டத்தட்ட முற்றாக அழிந்தே விட்டது. மனிதர்கள் வாழ முடியாத ஓர் இடமாக அது ஆயுததாரிகளால் மாற்றப்பட்டு விட்டது. போர் மனிதர்களை மட்டுமல்ல@ இடங்களைக் கூட கொல்கிறது.

இங்கு 1980களுக்குப் பின் வந்த எல்லா ஆண்டுகளுமே துப்பாக்கி அரக்கர்களின் காலமாகவே இருந்து வருகிறது. அங்கிருந்து தொடங்கும் துயரங்கள் நமது மக்களுக்கு இன்னும் ஓய்ந்தபாடில்லை. துரதிர்ஸ்டம் என்னவென்றால் போரும், அதன் விளைவுகளும் அதற்கான தீர்வும் இனரீதியான அளவு கோல்களாலேயே அளவிடப்படுகின்றன. உண்மையில் போரும் இனத்துவமும் அவைகளாகவே ஒரு போதும் சம்பந்தப்பட்டுக் கொள்வதில்லை. உண்மையில் போர் , அதிகாரத்தை அடையவும், தக்கவைத்துக் கொள்ளவும் விரும்புபவர்களால் வேறுவழியின்றி இனத்துவத்துடன் இணைக்கப்படுகிறது. ஆனால், போரின் கொடுங்கரங்கள் இனம்பார்த்து மனிதர்களின் குரல்வளைகளை நசிப்பதில்லை. அது மனிதர்கள் எல்லோரையும் தன் எதிரியாகக் கொள்கிறது. போரின் காலத்தினுள்ளும், போருக்குப்பின்னரும் அது ஏற்படுத்திய பேரழிவுகள்; பற்றிப் பேசும் போது துரதிர்ஸ்டவசமாக இனம் ஒரு முக்கிய விடயமாக வந்து விடுகிறது. அமைதிப் பேச்சுக்களில் இனம் பார்க்கப்படுகிறது. ஆனால் போரினால் விளையும் மரணங்களில் இனம் பார்க்கப்படுவதில்லை என்ற முரண்நகையை நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ளவேண்டும்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் நமது வரலாறு – துயரம் - இழப்புக்கள் - மரணங்கள் என எல்லாமும் ஈவிரக்கமற்று எப்படி மறைக்கப்பட்டன? நமது கோரிக்கைகளை ஒலிக்க எந்தக் குரலும் ஏன் நமக்கு மட்டும் இல்லாமல் போயிற்று?

ஆனால் போரையும் அது பரிசளித்த ஒரு கந்தலான, வலிகளாலான வாழ்வையும் நாங்கள் எப்படி மறந்துவிட முடியும்? போரின் அனுபவங்கள் எனக்கு மிகவும் கசப்பானவை. போரினால் முழுமையாக சிதைக்கப்பட்ட எனது தேசத்தின் - எனது கிராமத்தின்- எனது மக்களின் குழந்தையாக நான் எல்லாவற்றையும் - எல்லாவற்றையுமே ஞாபகம் கொள்வேன்.

இடப்பெயர்வும் அகதிவாழ்வும்

அந்த முதலாவது இடப்பெயர்வு எனக்கு இன்னும் அரைகுறையாக ஞாபகமிருக்கிறது. 1987ன் கடைசி நாட்களிலும் எண்பத்தி எட்டின் முற்பகுதிகளிலும் இந்திய இராணுவத்தின் நடவடிக்கைள் தாங்க முடியாதளவிற்கு கடுமையாகின. எங்கள் சொந்த நிலங்களில் வாழமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். கிழக்கில் இந்திய இராணுவம் ஆடிய வெறியாட்டத்தில் முற்றாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் எங்கள் கிராமமும் ஒன்று. 1987.12.02 அன்று இந்திய இராணுவம் எங்கள் கிராமத்தில் மறக்கமுடியாத ஒரு வரலாற்றை துப்பாக்கி முனைகளால் வரைந்தது. இந்திய இராணுவம் மீது புலிகள் நடத்திய தாக்குதலையடுத்து இராணுவம் அந்த துன்பியல் நிகழ்வை அரங்கேற்றியது. தியாவட்டவானில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட சுமார் 50 பேரளவில் வரிசையாக வைத்து இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் எனது உறவினர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் அடக்கம். எல்லோரையும் வரிசையில் வைத்து சுட்டதால் பக்கத்தில் வீழ்ந்தவர்களின் இரத்தத்தைப் பூசிக்கொண்டு ஒரு சிறுவனும் சிறுமியும் உயிர் தப்பினர்.

இதையடுத்து அங்கு மிக மோசமான அரசியல் குழப்பம் நிலவியது. இதனால் அங்கிருந்து வெளியேறி பக்கத்து ஊரிலிருந்த வாழைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தோம். வாழைச்சேனை அந்நூர் – மகா வித்தியாலயம் அகதிகளால் நிரம்பி வழிந்தது. வகுப்பறைகளை அகதிகள் நிறைத்துக் கிடந்தனர். மூலைக்கு ஒரு குடும்பம் என்றளவில் ஒரு வகுப்பறையை நான்கு குடும்பங்கள் பகிர்ந்துகொண்டனர் கவனிப்பதற்கு எவரும் வரவில்லை. இப்போதென்றால் அரசு – அரசு சாரா நிறுவனங்கள் என ஓடி வருகின்றன. அப்போது அகதிகளின் நிலை சொல்லமுடியாதளவிற்கு இருந்தது. பின் காலனியம் எனும் நூலில் ரொபர்ட் ஜே.சி. யங் குறிப்பிடுவதைப் போல அகதிகள்: நீங்கள் நிலைகுலைந்தவர்கள். வேர்கள் பிடுங்கப்பட்டவர்கள்.மொழிமாற்றறம் செய்யப்பட்டவர்கள். உங்களை மொழிபெயர்த்தவர்கள் யார்? மண்ணோடு உமக்கிருந்த பிணைப்பை அறுத்தவர்கள் யார்? நீங்கள் நிர்ப்பந்தத்தின் பேரால் பெயர்க்கப்பட்டு;ள்ளீர்கள். போர் அல்லது பஞ்சத்திலிருந்து தப்பித்து ஓடி வந்துள்ளீர்கள். நீங்கள், நகர்ந்துகொண்டிருக்கிறீர்கள். நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் ஓட்டத்தில் இடறுபவற்றைத் தாண்டிக்கொண்டே போகிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்வில் எதுவும் நீரோட்டமாகப் பாய்வதில்லை. நகர்வுகளில் உங்கள் வாழ்க்கை முழுமையாக ஸ்தம்பித்துவிட்டது. உங்கள் வாழ்வு முறிக்கப்பட்டு,குடும்பம் சிதறுண்டுவிட்டது. நீங்கள் அறிந்திருந்த அழகான, சோம்பலோடு கூடிய அன்றாட சாதார்ண நிலைத்த தன்மைகளும், உள்ளுர் சமூக இருப்பும் காணாமல் போயின. முதலாளித்துவத்தின் வன்முறைத் தகர்ப்புகளை அனுபவித்த நீங்கள், சாதார்ண வாழ்வின் வசதிகளை இழந்துவிட்டீர்கள். ஒரு குறுகிய கணத்தில் உங்கள் வாழ்வு அடைபட்டுவிட்டது. பல்வேறு காலச்சூழலில் மக்கள் அனுபவிக்கும் உணர்ச்சிச் சூடற்ற நவீனத்தின் உருவகமாக நீங்கள் மாறிவிட்டீர்கள். நீங்கள் புதிய உலகை, புதிய பண்பாட்டை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. யங்கினுடைய இந்த அகதிகள் பற்றிய விபரிப்பு எவ்வளவு உண்மையானது என்பதை அந்த வாழ்வை வாழ்ந்து பார்த்தவன் என்ற வகையில் நான் ஏற்றுக் கொள்கிறேன். அவரது இந்த வரிகள் உலகில் அகதிகள் உள்ளவரை வாழ்ந்துகொண்டிருக்கக்கூடியவை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

சரியாக ஒரு வாரத்துக்கு பின் என்று நினைக்கிறேன். அகதி வாழ்வின் இன்னொரு கட்டத்தை நோக்கி நாங்கள் நகர வேண்டியிருந்தது. ஏங்களது புறச் சூழல் வாழைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்திலிருந்து நாங்கள் அப்புறப்பட வேண்டி நிர்ப்பந்தித்தது.

ஆம், எங்கள் எல்லோரையும் இரண்டு லொறிகளில் தேங்காயை அடைவது போல் அடைந்து கொண்டு பொலநறுவை மாவட்டத்திலுள்ள செவனபுர, கட்டுவன்வில போன்ற சிங்களக் கிராமங்களிலுள்ள பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு சென்றனர்;. நாங்கள் ஆண்டாண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்த எங்களின் சொந்த ஊர் போல் எப்போதுமே உணர முடியாமல் போனதொரு இடத்தில் விட்டுச் செல்லப்பட்டோம்.

அங்கு ஒரு வித்தியாசமான வாழ்க்கை எங்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளிக்கூடம் செல்ல வேண்டியிருந்த, படிக்க வேண்டியிருந்த என்னைப் போன்ற சிறுவர்களினது வாழ்வு அந்நிய ஊர்களிலுள்ள பாடசாலைகளின் மூலைகளுக்குள் ஆவியாகிக் கொண்டிருந்தது.

இங்கு வந்திருந்த அகதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியிருந்தது. பழக்கப்படாத அகதி வாழ்வை முற்றிலும் அந்நியமானதொரு சூழலில் அவர்கள் அனைவரும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். வேறெல்லாவற்றையும் விட அந்த மக்களுக்கிருந்த மிகப்பெரும் வலி அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட 5-6 மாதங்கள் அத்தகையதொரு அகதி வாழ்வை அங்கு வாழ்ந்து தொலைக்க வேண்டியிருந்தது அவர்களுக்கு.

இந்த சிங்கள கிராமத்தில் எங்களது வாழ்வு வரையறுக்கப்பட்டதாய் இருந்தது. சிங்கள மக்கள் எங்களுக்கு நேரடியாக எந்த உதவியையும் செய்யவில்லை. அதேநேரம் எந்தத் தொந்தரவையும் கூட அவர்கள் எங்களுக்கு தந்ததாக எனக்கு நினைவில்லை. சிறுவர்களின் சில விளையாட்டுத்தனமாகன ஆனால் ஓரளவு இனவாதத்துடன் கூடிய சின்னச் சின்னத் தாக்குதல்களைத் தவிர வேறெந்த ஒதுக்கலும் எங்களுக்கெதிராக பிரயோகிக்கப்பட்டிருக்கவில்லை.

பின்னர் எல்லோரும் எங்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டோம். சொந்த ஊருக்குச் செல்வதற்காக வெலிகந்த ரயில் நிலையத்தில் தலையிலும் தோள்களிலும் மூட்டை முடிச்சுக்களுடனும், வயிற்றில் பசியுடனும் நீண்ட நேரமாக நாங்கள் காத்துக்கிடக்க நேரிட்டது. சே குவேரா ஓரிடத்தில் தீர்க்கமாகச் சொன்ன ஞாபகம் ‘சிறிய சுமை, வலிமையான கால்கள், பிச்சைக்காரனின் வயிறு இவைதான் எனது குறிக்கோள்’ இது அகதிகளின் விடயத்திலும் மிகவும் பொருந்தி வருகிறது. ஆனால் அகதிகள் எப்பொழுதும் பெரிய சுமைகளையே சுமந்து திரிகின்றனர். உண்மையில், அகதிகள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இடம் பெயரும் போது அவர்கள் உணர்வுள்ள நிலையில் அறுவைச் சிகிச்சைக்குட்படுத்தப்படுவது போன்று உணர்கிறார்கள்.

இங்கு வந்து பார்த்த போது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எங்களை விடவும் ஊர் மிகவும் இளைத்துக் கிடந்தது. கிராமத்தின் ஆன்மாவை எங்களால் நெருங்க முடியாதிருந்தது. முற்றிலும் எங்களுக்கு அந்நியமானதொரு இடத்தில் வந்து விட்டிருப்பது போல உணர்ந்தோம். சொந்த ஊரையே அந்நியத்தன்மையுடன் பார்க்கும் நிலைக்கு போர் எங்களை ஆளாக்;கியிருந்தது. வீட்டின் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றிலும் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்திருந்தன. போகும் போதிருந்த கிராமத்தின் இயற்கை வனப்பு மிச்சசொச்சம் எதுவுமின்றி துடைத்தழிக்கப்பட்டிருந்தது. ஆடு, மாடு போன்றவை ஷெல்களில் அகப்பட்டு ஆங்காங்கே இறந்து கிடப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. சிதைக்கப்பட்ட எங்கள் வாழிடங்களிலேயே மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கினோம். ஆனால், அதுவும் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.
இந்த மக்களின் வாழ்வைப் பொறுத்தவரை, இத்தகையதொரு அரசியல் சூழல், இடப்பெயர்வு, அகதி வாழ்வு எல்லாமும் புதியவையாக இருந்தன. அதனால் எதிர்காலம் பற்றிய பெரிய அவ நம்பிக்கைகள், அரசியல் பிரக்ஞைகள் என எதுவும் எவருக்குள்ளும் எழுந்திருக்கவில்லை என உறுதியாக நம்புகிறேன்.

இந்த அபத்தங்களை – துயரங்களை இந்த மக்கள் மீது திணித்தது எது? இன்னும் இவைகளை சகித்துக் கொள்ளும் படி அவர்களை எப்போதும் தூண்டிக் கொண்டிருப்பது எது?

இந்திய இராணுவத்தின் வெளியேற்றம்

ஆர். பிரேமதாசா ஜனாதிபதியானதையடுத்து இந்திய இராணுவத்தினர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர். கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினர் நாடு திரும்புவதற்காக கொழும்பு நோக்கி கவசவாகனங்கள்,பீரங்கிகள்,யுத்த தாங்கிகள், லொறிகள்,இராணுவ பஸ் வண்டிகள் என பலதரப்பட்ட வாகனங்களில் எங்களது கிராமத்தை அண்டியிருந்த பிரதான வீதியால் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்த காட்சியை என்னைப் போன்ற சிறியவர்கள் மட்டுமன்றி எமது கிராமத்தின் ஒட்டுமொத்தக் குடிகளும் இரசித்துக்கொண்டிருந்தனர். மிக நீண்ட நாட்களுக்குப்பின்னர் எங்களுக்கு இரசிக்கக் கிடைத்த காட்சி அதுவாகத்தானிருந்தது.

ஆயிரக்கணக்காண இராணுவ வீரர்களையும் கனரக ஆயுதங்களையும் சுமந்து சென்ற அந்த இராணுவ வாகனங்களின் பின்னால் ஒரு கேலி கலந்த கேள்வியும் பயணித்துக் கொண்டிருந்தது. இந்த பிரமாண்டமான படையினால் எப்படி ஒரு சாதார்ண இயக்கமொன்றை ஒழிக்க முடியாமல் போனது? என்னைப் பொறுத்தவரை உண்மையைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு முதன்மையான கேள்வி இது. உண்மையில் இலங்கை-இந்திய அரசாங்கங்களினால் எங்களுக்கு யுத்தம் என்றொரு நாடகம்தான் காட்டப்பட்டிருந்தது. இதில் இலங்கை-இந்திய அரசாங்கங்களோ-விடுதலை இயக்கங்களோ எவரும் தோற்கவில்லை. கடைசியில் தோற்றுப்போனது மக்கள்தான். அருந்ததி ராய் குறிப்பிட்டதைப் போல “மக்கள் மிக அரிதாகவே போர்களில் ஈடுபடுகிறார்கள் அரசாங்கங்கள் மிக அரிதாகவே போர்களில் தோற்கின்றன. மக்கள் கொல்லப்படுகிறார்கள். அரசாங்;கங்களோ மீண்டும் மீண்டும் பன்மடங்கு உத்வேகத்துடன் வெளிக்கிளம்புகின்றன. அவர்கள் முதலில் கோஷங்களைப் பாவித்து மனிதனது சயமான சிந்தனையை மழுங்கடிக்கச் செய்கிறார்கள். பின் மக்களை இயல்பாகவே நடைப்பிணங்கள் ஆக்குகிறார்கள்” எங்களது விசயத்திலும் கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுதான் நடந்திருக்கிறது. மக்கள் மிக நன்றாகவே ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இழப்புகளுக்கும் வேதனைக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். நடைப்பிணங்களாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்திய இராணுவத்தினர் வெளியேறிச் சென்றுவிட்டனர். அதனாலென்ன புதிதாக இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகள் முளைக்கத் தொடங்கின. மீண்டும் அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள், கொலைகள், விமானக் குண்டு வீச்சுகள், எரிப்புச் சம்பவங்கள், கலவரங்கள் என இந்த மக்களை பலி கொள்ள ஆரம்பித்திருந்தன. இதனால், மீண்டும் வாழைச்சேனை அந்நூர் மகா வித்தியாலத்தை நோக்கி ஊரை விட்டும் அலை அலையாக வெளியேறிச் சென்ற குடும்பங்களில் நாங்களும் ஒர் குடும்பமாக இருந்தோம். பெரும்பாலும் எங்கள் எல்லோருக்கும் மாட்டு வண்டிகள் இருந்தன. இந்த வண்டிகளில்தான் எங்கள் பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம். நாங்கள் வரிசையாக மாட்டு வண்டிகளில் புலம் பெயர்ந்து சென்ற காட்சியை என்னால் கலைத்துவமாக விபரிக்க முடியாமையையிட்டு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் அதுபோன்றதொரு காட்சியை பொற்றேகாட் தனது விஷக்கன்னி எனும் நாவலில் எவ்வளவு அற்புதமாக விபரிக்கிறார்.

வெளியேற்றத்துக்கு முதல் நாள் இலங்கை விமானப்படை பெருத்த இரைச்சலுடன் எங்கள் ஊருக்கு மேலால் பறந்து பறந்து குண்டுகளை வீசிக் கொண்டிருந்தது. குண்டுகளிலிருந்து தப்பி;க்க மக்கள் சிதறி ஓடினர். நான் மிக - மிகச் சிறுவனாக இருந்தபடியால் எனது தந்தை என்னை தூக்கிக் கொண்டு ஓடினார். அப்போது நாம் முஸ்லிம்கள் என்ற இன அடையாளத்தை காட்டிக் கொள்வதற்காக ஆண்களை தலையில் தொப்பி போட்டுக் கொண்டும், பெண்களை முக்காடு போட்ட படியும் ஓடும்படி எனது தந்தை கட்டளை பிறப்பித்த படி ஓடினார். ஏல்லா வீடுகள் மீதும் விமானப்படையினர் குண்டுகளை வீசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை எங்களது வீடுகள் புலிகளின் மறைவிடங்கள். அதனால் அவை அவர்களின் இலக்குக்குள்ளாகின. எங்களது-கிராமத்தில் அன்று வீடுகளுக்குள்ளிருந்து கிட்டத்தட்ட எல்லோருமே வெளியேறி பள்ளிவாசலில் தஞ்சமடைந்தோம். பறவைகள் மட்டுமே பறந்த எங்கள் கிராமத்தின் மேலால் கொலை வெறிகெண்;ட அச்சந் தரும் இயந்திரப்றவைகள் மூர்க்கமாகப் பறந்து கொண்டிருந்தன. பள்ளிவாசலுக்கு மேலாலும் அவை இப்போது வட்டமிடத் தொடங்கி இருந்தன. எனினும் எல்லோரும்- ஆண்கள்,பெண்கள்,முதியவர்கள்,சிறுவர்கள் என - வெளியில் வந்து வெள்ளைத்துணிகளை கம்புகளில் கட்டிக்கொண்டு சமாதானக் கொடி பறக்கவிட்டோம். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இப்போது எங்களால் போதியளவில் முயற்சிகள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. இதனால் எந்தத் தாக்குதலும் எம்மீது புரியப்படவில்லை. மறுநாளே அங்கிருந்து இரண்டாவது முறையாக வெளியேறினோம். வெளியேறினோம் என்பதை விட ”வெளியேற்றப்பட்டோம்” என்ற சொல்லாட்சியே மிகவும் பொருந்தி வருகிறது.

இரண்டாவது இடப்பெயர்வுக்குப் பின்..

மீண்டும் அதே இடத்தில் அகதி வாழ்வு தொடங்கப்பட்டது. இம்முறை கடுமையான அளவில் பசியாலும் பட்டினியாலும் பயத்தாலும் அகதிகள் அவதிப்;பட்டனர். இந்நாட்களில் நாங்கள் எல்லாத் தரப்பாராலும் வஞ்சிக்கப்பட்டிருந்தோம். இராணுவம்-தமிழ் ஆயுதக் குழுக்கள் என எந்தவொரு துப்பாக்கி தரித்த தரப்பும் இந்த மக்களின் விடயத்தில் நேர்மையாக நடந்து கொண்டன என்று சொல்லமாட்டேன். புலிகளின் போராட்டம் தமிழ் மக்களுக்காக மட்டும் என்ற குறுகிய தளத்துக்குள் சுருக்கப்பட்டதையடுத்து இந்த மக்களின் வாழ்வு மிகவும் துயர்நிறைந்ததாகியது.

வாழைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயத்தின் வகுப்பறைகள் விழுங்கி இருந்த அகதிகளில் நாங்களுமிருந்தோம். அப்போது எங்களுக்கு மின்சாரவசதிகள் எதுவும் செய்து தரப்பட்டிருக்கவில்லை. மீண்டும் நான்கு குடும்பங்கள் ஒரு வகுப்பறையை பகிர்ந்துகொண்டோம். மொத்தம் 5 பேர் கொண்ட எங்கள் குடும்பத்துக்கு இரவுச்சாப்பாட்டுக்காக மூன்று ரொட்டிகள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஒளியூட்டுவதற்குமட்டும் ஒரேயொரு விளக்கு. திடீரென அகதி முகாமுக்குள் ‘பொடியன்மார்’ (முஸ்லிம்கள் அப்போது புலிகளை அழைக்க பயன்படுத்திய சொல்) புகுந்து எல்லோரையும் வெட்டிக் கொல்லப்போவதாக ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டது. இந்தப் புரளியால் ஒரு கணம் அகதி முகாம் அல்லோலகல்லோலப்பட்டது. ரொட்டிகளையும் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு நாங்கள் இருளில் தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டிருந்தோம். பள்ளிக்கூட வளவுக்குள்ளிருந்த சிறிய பள்ளிவாசல் ஒன்றுக்குள் இப்போது எல்லோரும் தஞ்சம் புகுந்தோம். பள்ளியும் இருளில் மூழ்கிக் கிடந்தது. அநேகமானோர் ‘ஹவ்ழூ’ (முஸ்லிம்கள் தொழுவதற்கு முன் தண்ணீரால் தங்களை சுத்தம் செய்து கொள்ள பயன்படுத்தும் நீர்த்தொட்டி) க்குள் ‘தொபீர்…தொபீர்…’ என்று விழுந்துகொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அப்படி விழுந்தவர்களில் அகதிகளும் அவர்களின் கையிலிருந்த சில பொருட்களுமிருந்தன. அதில் எங்கள் மூன்று ரொட்டிகளும் அடங்கி இருந்தன. இது போன்ற அனுபவங்கள் அத்துடன் முற்றுப் பெற்றுவிடவில்லை. பின்வந்த நாட்களிலும் நாங்கள் அதுபோன்ற அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டி வந்தது. இதனால் ரொட்டிகளை சுட்டவுடன் சாப்பிடும் வழக்கத்தை நாங்கள் கைக்கொள்ளவேண்டி இருந்தது.

அகதிகளின் பிள்ளைகளுக்காக அதாவது என்போன்ற சிறார்களுக்காக எங்களின் எதிர்காலத்திற்காக அங்கு ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அதாவது இடம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகளுக்காக வாழைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தின் ஒரு பகுதியில் விசேட வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நாங்கள் கற்ற அதே தரங்களில் படிக்க அனுமதிக்கப்பட்டிருந்தோம். ஆனால் வகுப்பறைகளில் எங்களுக்கு சில ஆசிரிய அதிகாரங்கள் உரிய இடங்களைத் தர மறுத்தன. போதியளவு தளபாட வசதிகளைக் கொண்டிராத வகுப்பறைகளில் வெறும் திண்ணைகளில் வைத்துப் போதிக்கப்பட்டோம். இதில் மிகப்பெரிய வலி என்னவென்றால் எங்கள்மீது கொஞ்சமும் அன்புகாட்டாத ஒரு ஆசிரியையின் பொறுப்பில் நாங்கள் விடப்பட்டதுதான்;. அந்த ஆசிரியையால் நாங்கள் மிக மோசமாக நடத்தப்பட்டோம். கடுமையான தண்டனைகள் எங்களுக்கு வழங்கப்பட்டன. அந்த ஆசிரியையின் நடவடிக்கைகளால் கடுமையாகப்பாதிக்கப்பட்ட நானும் எனது சக அகதி மாணவனும் அதே தர மாணவர்களைக் கொண்ட வேறொரு வகுப்பில் போய் அமர்ந்தோம். ஆனால் அதில் அனுமதி மறுக்கப்பட்டு அந்த வகுப்பிலிருந்து நாங்கள் அன்றே வெளியேற்றப்பட்டு எங்களது சொந்த வகுப்புக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டோம். எனினும் அந்த ஆசிரியையின் போக்கில் எந்த மாறுதலும் இல்லை. அந்த ஆசிரியையின் கடும்போக்கு நடவடிக்கைகள் தண்டணைகள் எங்களுக்கு எந்தவொரு செய்தியையும் சொல்லவில்லை. தண்டனைகள் மூலம் அவர் எங்களிடம் எதனை எதிர்பார்த்தார். அகதி என்ற அக உணர்வினதும், புற உணர்வினதும் தாக்கங்களுக்கு மத்தியில் அந்த கல்வி நிலையத்தில் எங்களால் எந்த அறிவையும் பெற்றுக்கொள்ளவும் முடியவில்லை. எனினும் அந்தப் பாடசலையிலிருந்து நாங்கள் கட்டங் கட்டமாக வெளியேறும் வரை அந்த வகுப்புகளுக்கு செல்லவேண்டி இருந்தது. போரின் கோட்டோவியங்களை எங்கள் பாடக் கொப்பிகளில் வரையும் ஓர் தலைமுறை எங்களுக்குள் மெல்ல மெல்ல உருவாகிக்கொண்டிருந்தது. எவரது கண்களிலும் படவில்லை. எவரது செவிகளிலும் விழவில்லை. எவரது மனச்சாட்சியையும் உறுத்தவில்லை. மஹ்மூத் தர்;வீஷ் சொன்னதைப்போல “நாங்கள் உயிரோடிருக்கிறோம். எது சரி எது பிழை என்பது இப்போது எனக்கு சரியாகத் தெரியவில்லை எங்களுடைய காலமும் நேரமும் நேரப் பொருத்தங்களும் ஒழுங்கற்றுச் சிதறிக் கிடக்கின்றன…”

ஒழுங்ககள் சிதறிய, உண்மைகள் புதையுண்ட,நம்பிக்கைகள் வரண்ட அந்த வாழ்வு நமக்கு வாய்த்திருந்த அந்த வாழ்வு பற்றி நான் எழுதிய இந்த சொற்பமான வரிகளைத்தாண்டி இன்னும் அதன் பக்கங்கள் விரிவானவை…வலியை வேதனையை எழுதுவதும் அதை உணர்வதைப் போலவேயுள்ளது என்பதைத்தான் இந்த எழுத்து இப்போது எனக்குச் சொல்லித் தந்த உண்மை.

போரின் கோட்டோவியம்

ஏங்களைப்பொருத்தவரை போர் தந்த இந்த வாழ்வு நமது அனுபவத் தொகுப்பின் ஒரு சிறு பாகம் மட்டுமே. சொல்லப்போனால் ஒரு தடித்த புத்தகத்தின் கால்வாசிக்கும் குறைவான பக்கங்கள்;தான். எனினும் நம்மிடம் ஒரு முழுமையான துயர் படிந்த – புறக்கணிக்கப்பட்ட சிதைக்கப்பட்ட வாழ்வு உள்ளது. இந்த வாழ்வு போர் துப்பாக்கிகளால் வரைந்த கோடுகளாலான சித்திரம் போன்றது. பேரழிவுகளைத் தந்து விட்டு ஓய்ந்த அந்தப் போரின் சிதிலமான கோட்டோவியமாய் இன்று எங்களது ஊர்-மக்கள்-தேசம்-வரலாறு-இலக்கியம் எல்லாமும் போரின் கோட்டோவியமாய்…என் நினைவு வெளியில் நீள்கிறது…இதனால் எனது கடந்த காலத்தை ஞாபகிப்பதை எப்போதும் தவிர்ப்பதையே விரும்பி வந்திருக்கிறேன்.

* இக்கட்டுரை எதுவரை- இதழ் 5 க்காக எழுதப்பட்டது

Advertisements

3 Comments

Filed under Uncategorized

3 responses to “போரும் வாழ்வும்

 1. என்றும் மறந்துவிட முடியாத கோர நாட்கள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். ஆவணப் படுத்தப்பட வேண்டிய கட்டுரை. எதிர்கால சந்ததியினரும் அறிந்திருக்க வேண்டிய துயர் தோய்ந்ததொரு வரலாறு.

  பகிர்வுக்கு நன்றி.

 2. முஹம்மத் றிழா

  இ – சமூத்திலும் ஜிப்ரிஃ ஹஸன் அவர்களைச் சந்திப்பதில் மிகவும் சந்தோசம். பேசவேண்டிய விடயங்களை சுவாரஸ்யமாக பேசும் திறமையை வாசகனாக நானும் ரசிப்பதுடண்டு. அனைவரோடும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்

 3. ஸபீர் ஹாபிஸ்

  ஜிப்ரி ஹஸன் இலங்கையின் அற்புதமான எழுத்தாளர்களுள் ஒருவர். காலத்தின் தேவையுணர்ந்து இணையத்துள் பிரவேசித்துள்ளார். கையெழுத்துப் பிரதிகளை விட, இணைய எழுத்துக்கள் பல வழிகளிலும் சக்தி மிக்கவை. ஜிப்ரியைப் போன்றோர் இத்துறையில் ஆற்ற வேண்டிய சேவைகள் ஏராளமுள்ளன.
  வருக ஜிப்ரி, உங்கள் வளங்களைப் பகிர்க எம்முடன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s